தூத்துக்குடி மாநகராட்சியில் வளர்ச்சி பணிகளை மேற்கொள்ள 60 வார்டுகளிலும் குழு அமைக்க முடிவு
தூத்துக்குடி மாநகராட்சியில் வளர்ச்சி பணிகளை மேற்கொள்ள 60 வார்டுகளிலும் குழு அமைக்க கவுன்சிலர்கள் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
தூத்துக்குடி மாநகராட்சியில் 60 வார்டுகளிலும் வளர்ச்சி பணிகளை மேற்கொள்ள வார்டு குழு, பகுதி சபா அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
மாநகராட்சி கூட்டம்
தூத்துக்குடி மாநகராட்சி சாதாரண கூட்டம், மாநகராட்சி அலுவலக கூட்ட அரங்கத்தில் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு மேயர் ஜெகன் பெரியசாமி தலைமை தாங்கினார். ஆணையர் தி.சாருஸ்ரீ, துணை மேயர் ஜெனிட்டா ஆகியோர் முனனிலை வகித்தனர்.
கூட்டத்தில் உள்ளாட்சி நிர்வாகத்தை வலுப்படுத்தவும், நகர்ப்புற உள்ளாட்சி செயல்பாடுகளில் பொதுமக்களின் பங்கேற்பு மற்றும் திட்டம், வளர்ச்சி பணிகளை செயல்படுத்தவும் மாநகராட்சிகள் மற்றும் நகராட்சிகளில் வார்டு குழுக்கள் மற்றும் பகுதி சபாக்களை அமைக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதன் அடிப்படையில் தூத்துக்குடி மாநகராட்சியில் மொத்தமுள்ள 60 வார்டுகளிலும் தலா ஒரு வார்டு குழு மற்றும் ஒவ்வொரு வார்டிலும் தலா 5 பகுதி சபாக்களை அமைக்க அனுமதி கோரும் தீர்மானம் மற்றும் இந்த வார்டு குழுக்களின் உறுப்பினராக ஒவ்வொரு வார்டிலும் 5 பேரை பரிந்துரை செய்து, அந்த பட்டியலுக்கு ஒப்புதல் அளிக்கும் தீர்மானம் கொண்டு வரப்பட்டது.
வெளிநடப்பு
இதற்கு எதிர்ப்பு தெரிவித்ததுடன், வார்டு குழு மற்றம் பகுதி சபா போன்றவை கவுன்சிலர்களின் அதிகாரத்தை குறைக்கும் செயல். இதனை அ.தி.மு.க ஏற்றுக் கொள்ளவில்லை என்று கூறி எதிர்கட்சித் தலைவர் வீரபாகு தலைமையில் 5 அ.தி.மு.க கவுன்சிலர்களும் கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்தனர். தொடர்ந்து மாநகராட்சி கூட்டம் நடந்தது.
தீர்மானம்
கூட்டத்தில் மாநகராட்சியில் உள்ள அனைத்து பகுதிகளையும் ஏ, பி, சி என 3 மண்டலங்களாக பிரித்து காலிமனை வரியை உயர்த்தும் தீர்மானம் உள்ளிட்ட கூட்டத்தில் கொண்டு வரப்பட்ட 20 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. தொடர்ந்து கவுன்சிலர்கள் தூத்துக்குடி எம்.ஜி.ஆர் பூங்கா அருகே குரூஸ் பர்னாந்து மணிமண்டபம் அமைக்கும் பணிகளை விரைவாக தொடங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினர். மேலும் தங்கள் வார்டு பிரச்சினைகள் தொடர்பாக கோரிக்கை விடுத்தனர். அதற்கு பதில் அளித்து மேயர் பேசும் போது, ராவ்பகதூர் குரூஸ் பர்னாந்து, மணிமண்டபம் அமைப்பதற்கான புதிய இடம் தொடர்பாக அரசாணை வந்ததும், மாநகராட்சியில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு விரைவாக பணிகள் தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.
கூட்டத்தில் மாநகராட்சி கவுன்சிலர்கள், அதிகாரிகள் கலந்து கொண்டனர்.