திருவாரூரில், மீண்டும் விலை உயர்ந்த தக்காளி

திருவாரூரில் குறைந்து வந்த நிலையில் தக்காளி விலை மீண்டும் உயர்ந்துள்ளது. கிலோவுக்கு ரூ.20 முதல் ரூ.30 வரை அதிகரித்துள்ளது.

Update: 2023-07-28 18:45 GMT

திருவாரூரில் குறைந்து வந்த நிலையில் தக்காளி விலை மீண்டும் உயர்ந்துள்ளது. கிலோவுக்கு ரூ.20 முதல் ரூ.30 வரை அதிகரித்துள்ளது.

காய்கறி மார்க்கெட்

திருவாரூர் கடைவீதியில் உள்ள காய்கறி மார்க்கெட்டில் ஏராளமான கடைகள் உள்ளன. இந்த மார்க்கெட்டிற்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், வெளிமாநிலங்களில் இருந்தும் காய்கறிகள் விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது. இதே போல் திருவாரூரை சுற்றியுள்ள கிராமங்களில் விளையும் காய்கறிகள் வெளியூர்களுக்கு விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படும்.

ஓசூர், தளிக்கோட்டை, கிருஷ்ணகிரி, திருச்சி உள்ளிட்ட இடங்களில் இருந்து தினமும் தக்காளி திருவாரூருக்கு விற்பனைக்காக கொண்டு வரப்படுகிறது. தற்போது வெயில் மற்றும் மழை ஆகியவற்றால் காய்கறிகள் விளைச்சல் பாதிக்கப்பட்டது.

தக்காளி விலை அதிகரிப்பு

அதே போல் இமாச்சல பிரதேசம், பஞ்சாப், ஹரியானா உள்ளிட்ட வட மாநிலங்களில் இடைவிடாத மழை பெய்ததால் காய்கறி விளைச்சல் பாதிக்கப்பட்டது. இதன் காரணமாக கடந்த மாதத்தில் தொடர்ந்து தக்காளி விலை உயர்ந்து கொண்டே சென்றது.

தக்காளி விலை கிலோ ரூ.120 வரை விற்பனை செய்யப்பட்டது. இதனால் ஏழை, எளிய மற்றும் நடுத்தர மக்கள் வீடுகளில் உணவு சமைப்பதற்கு தக்காளியை அதிகளவில் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டது. பலர் வீடுகளில் சாம்பார், ரசம் மற்றும் குழம்பு வைக்க தக்காளிக்கு பதிலாக புளியை பயன்படுத்தி வந்தனர்.

மீண்டும் உயர்ந்தது

கடந்த வாரத்தில் சந்தைக்கு தக்காளி வரத்து சற்று அதிகரித்ததால் அதன் விலை குறைந்தது. ஒரு கிலோ ரூ.90 முதல் ரூ.100 வரை விற்பனை செய்யப்பட்டது.தக்காளி விலை குறைந்து வந்த நிலையில் நேற்று மீண்டும் விலை அதிகரித்தது.

நேற்று தக்காளி கிலோவுக்கு ரூ.20 முதல் ரூ.30 வரை விலை அதிகரித்தது. இதனால் தக்காளி விலை மீண்டும் ரூ.100-ஐ கடந்தது. ஒரு கிலோ தக்காளி ரூ.125-க்கு விற்பனை செய்யப்பட்டது. வெளி மார்க்கெட்டுகளில் ரூ.130 முதல் விற்பனை செய்யப்பட்டது. திருவாரூரில் உள்ள காய்கறி மார்க்கெட்டில் தக்காளி விலை மீண்டும் ரூ.100-ஐ கடந்ததால் இல்லத்தரசிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

வரத்து குறைந்தது

இதுகுறித்து வியாபாரிகள் கூறுகையில், திருவாரூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கடந்த மாதம் தக்காளி விலை அதிகரித்தது. கடந்த வாரம் விலை குறைந்தது. இதனை தொடர்ந்து, தற்போது மீண்டும் மழை மற்றும் வெயிலால் வரத்து குறைந்தது.

இதனால் தக்காளி விலை அதிகரிக்க தொடங்கி விட்டது. இதனால் மொத்த வியாபாரிகள் கூட தக்காளியை வாங்க மறுத்து வருகின்றனர். பெரும்பாலான மொத்த வியாபாரிகள் வழக்கமாக வாங்கும் தக்காளியை கூட குறைவாக வாங்கி செல்கின்றனர் என்று தெரிவித்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்