திருக்குவளையில்,மக்கள் நலப்பணியாளர்கள் உண்ணாவிரதம்
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருக்குவளையில், மக்கள் நலப்பணியாளர்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். அப் போது 5 பெண்கள் மயங்கி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்ட
வேளாங்கண்ணி:
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருக்குவளையில், மக்கள் நலப்பணியாளர்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். அப் போது 5 பெண்கள் மயங்கி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
உண்ணாவிரத போராட்டம்
நாகை மாவட்டம் திருக்குவளையில் உள்ள முன்னாள் முதல் -அமைச்சர் கருணாநிதி வீட்டின் முன்பு மக்கள் நலப்பணியாளர்கள் சங்கம் சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடந்தது.
தி.மு.க. தேர்தல் அறிக்கையின்படி பணி நியமன ஆணை வழங்க வேண்டும். காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். 2011-ம் ஆண்டில் பணிநீக்க காலத்திற்கு பிறகு இறந்த பணியாளர்களின் குடும்பங்களுக்கு நிவாரண தொகையும், வாரிசுகளுக்கு வேலையும் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடந்தது.
5 பெண்கள் மயக்கம்
இந்த போராட்டத்திற்கு சங்கத்தின் மாநில தலைவர் செல்லபாண்டியன் தலைமை தாங்கினார். பொருளாளர் ரெங்கராஜன் முன்னிலை வகித்தார். இதில் அனைத்து மாவட்ட பொறுப்பாளர்கள் மற்றும் மக்கள் நலப் பணியாளர்கள் கலந்துகொண்டனர்.
இந்த போராட்டத்தில் ஈடுபட்ட திண்டுக்கல் மாவட்டம் குஜிலியம்பாறை பகுதியை சேர்ந்த மகேஸ்வரி, கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்குடி பகுதியை சேர்ந்த பொற்கொடி, செங்கல்பட்டு மாவட்டம் அச்சரபாக்கம் பகுதியை சேர்ந்த செங்கனி, மரக்காணம் பகுதியை சேர்ந்த பரமேஸ்வரி, தென்காசி மாவட்டம் மேலநீதிக்கநல்லூர் ஊராட்சியை சேர்ந்த துளசியம்மாள் ஆகிய 5 பெண்கள் திடீரென மயங்கி விழுந்தனர்.
பரபரப்பு
உடனடியாக அவர்களை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக திருக்குவளை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. போராட்டத்தில் ஈடுபட்ட 5 பெண்கள் மயங்கி விழுந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.