திருச்செந்தூரில் பிளாஸ்டிக் மறுசுழற்சி மையத்தில் அமைச்சர்கள் பெரியகருப்பன், அனிதா ராதாகிருஷ்ணன் ஆய்வு
திருச்செந்தூரில் பிளாஸ்டிக் மறுசுழற்சி மையத்தில் அமைச்சர்கள் பெரியகருப்பன், அனிதா ராதாகிருஷ்ணன் ஆகியோர் ஆய்வு நடத்தினர்.
திருச்செந்தூர்:
திருச்செந்தூரில் பிளாஸ்டிக் மறுசுழற்சி மையத்தில் அமைச்சர்கள் கே.ஆர்.பெரியகருப்பன், அனிதா ராதாகிருஷ்ணன் ஆய்வு மேற்கொண்டனர்.
பிளாஸ்டிக் மறுசுழற்சி மையம்
ஒருமுறை பயன்படுத்தி விட்டு தூக்கி எறியப்படும் பிளாஸ்டிக் பொருட்களை உற்பத்தி செய்யவும், பயன்படுத்தவும், நாடு முழுவதும் நேற்று முதல் தடை அமல்படுத்தப்பட்டது. இதையொட்டி பழைய பிளாஸ்டிக் பொருட்களில் இருந்து மதிப்புகூட்டு பொருட்கள் தயாரிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.
இந்த நிலையில் திருச்செந்தூர் வீரபாண்டியன்பட்டினம் ஆதித்தனார் கல்லூரி எதிர்புறத்தில் உள்ள பிளாஸ்டிக் மறுசுழற்சி மையத்தை ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன், மீன்வளம், மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் ஆகியோர் நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர். அங்கு பழைய பிளாஸ்டிக் பொருட்களை மதிப்பு கூட்டும் வகையில் தயார் செய்யும் பணியில் ஈடுபட்ட மகளிர் சுய உதவிக்குழுவினரிடம் அமைச்சர்கள் கலந்துரையாடினர்.
பின்னர் அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் கூறியதாவது:-
நல்ல திட்டங்களுக்கு தமிழகம் முன்னோடி
தமிழகத்தில் 10 ஆண்டாக முறையான நிர்வாகம் இல்லாத அரசு செயல்பட்டது. தற்போது தி.மு.க. ஆட்சி பொறுப்பேற்ற பிறகு கடந்த ஓராண்டாக சீர்கேடுகள் சரி செய்யப்பட்டு, சீரான நிர்வாகம் சிறப்பாக நடைபெற்று வருகிறது.
ஒரு முறை பயன்படுத்திய பிளாஸ்டிக் பொருட்களை மீண்டும் பயன்படுத்தக் கூடாது என்று தமிழக அரசு ஏற்கனவே சட்டம் இயற்றியுள்ளது. தற்போது மத்திய அரசு அதற்கான திட்டத்தை தேசிய அளவில் கொண்டு வந்துள்ளது.
பலமுறை தமிழகத்தில் கொண்டு வரக்கூடிய திட்டங்கள்தான் அகில இந்திய அளவில் விரிவுபடுத்தப்படுகிறது. எனவே பல நல்ல திட்டங்களுக்கு தமிழகம் முன்னோடியாக திகழ்ந்து வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
நட்டாத்தி- மேல ஆத்தூர்
முன்னதாக சாயர்புரம் அருகே நட்டாத்தி பஞ்சாயத்தில் நடைபெற்று வரும் ஊரக வளர்ச்சி பணிகளை அமைச்சர்கள் கே.ஆர்.பெரியகருப்பன், அனிதா ராதாகிருஷ்ணன் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
தொடர்ந்து மேல ஆத்தூர் பஞ்சாயத்து குச்சிக்காடு கிராமத்தில் ஆகாயத்தாமரையில் இருந்து மதிப்பு கூட்டு பொருட்கள் தயாரிக்கும் பயிற்சி மையத்தை அமைச்சர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். அங்கு தலைமை பயிற்சியாளர் கேசவராவ், பயிற்சியாளர் ரமணா ஆகியோர் மகளிர் சுய உதவிக்குழுவினருக்கு ஆகாயத்தாமரையில் இருந்து கூடைகள், பாய்கள், பைகள் போன்ற மதிப்புகூட்டு பொருட்கள் தயாரிக்க பயிற்சி அளிப்பதை பார்வையிட்டனர். அப்போது பயிற்சி மையத்துக்கு தேவையான அனைத்து உதவிகளும் செய்து தரப்படும் என்று அமைச்சர்கள் தெரிவித்தனர்.
கலந்து கொண்டவர்கள்
நிகழ்ச்சிகளில் மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ், ஊர்வசி அமிர்தராஜ் எம்.எல்.ஏ., ஊரக உள்ளாட்சித்துறை ஆணையாளர் தரேஸ் அஹமது, ஊரக வாழ்வாதார இயக்க மகளிர் திட்ட கூடுதல் இணை இயக்குனர் முத்து மீனா, திருச்செந்தூர் உதவி கலெக்டர் புகாரி, தி.மு.க. மாநில மாணவரணி துணை அமைப்பாளர் உமரி சங்கர், திருச்செந்தூர் நகராட்சி துணைத்தலைவர் செங்குழி ரமேஷ், வட்டார வளர்ச்சி அலுவலர் முத்துகிருஷ்ணராஜா, துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ராதாகிருஷ்ணன், வீரபாண்டியன்பட்டினம் பஞ்சாயத்து தலைவர் எல்லமுத்து, துணைத்தலைவர் ஜெகதீஸ் வி.ராயன், வார்டு உறுப்பினர்கள் முருகன், நவஜோதி, ஹெவன்லி, பஞ்சாயத்து செயலாளர் பட்டுக்கனி, மேல திருச்செந்தூர் பஞ்சாயத்து தலைவர் மகாராஜன்,
மாவட்ட கவுன்சிலர் பிரம்மசக்தி, ஆழ்வார்திருநகரி யூனியன் தலைவர் ஜனகர், யூனியன் ஆணையாளர்கள் பாலசுப்பிரமணியம், கருப்பசாமி, ஆத்தூர் நகர பஞ்சாயத்து தலைவர் கமால்தீன், தி.மு.க. நகர செயலாளர் முருகானந்தம், மேல ஆத்தூர் பஞ்சாயத்து துணைத்தலைவர் பக்கீர் முகைதீன், மக்கள் தொடர்பு அலுவலர் ஜெகவீரபாண்டியன், வட்டார வளர்ச்சி அலுவலர் சுரேஷ், தாசில்தார்கள் சுவாமிநாதன், கண்ணன், நட்டாத்தி பஞ்சாயத்து தலைவர் சுதாகலா, துணைத்தலைவர் எஸ்.வி.பி.எஸ்.பண்டாரம், ஊராட்சி செயலாளர் முத்துராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.