தேனி மாவட்டத்தில் முக கவசம் அணியாவிட்டால் ரூ.500 அபராதம்
தேனி மாவட்டத்தில் நாளை(வெள்ளிக்கிழமை) முதல் முக கவசம் அணியாவிட்டால் ரூ.500 அபராம் விதிக்கப்படும் என்று கலெக்டர் தெரிவித்தார்
தேனி மாவட்டத்தில் 4 மாத காலமாக கொரோனா வைரஸ் பாதிப்பு இல்லை என்ற நிலைமை இருந்தது. கடந்த 19-ந்தேதி மீண்டும் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் பரவ தொடங்கியது. இந்நிலையில் இன்று ஒரே நாளில் மாவட்டத்தில் 28 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதனால் வைரஸ் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 94 ஆக உயர்ந்தது.
மீண்டும் கொரோனா பரவி வரும் நிலையில், தேனி மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக அரசு வெளியிட்ட வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றாதவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட கலெக்டர் முரளிதரன் தெரிவித்து இருந்தார். இருப்பினும் பொது இடங்களில் மக்கள் முக கவசம் அணியாமலும், சமூக இடைவெளியை பின்பற்றாமலும் உலா வருகின்றனர். இதையடுத்து பொது இடங்களில் முக கவசம் அணியாவிட்டால் ரூ.500 அபராதம் விதிக்கவும், இந்த அபராதம் விதிக்கும் நடைமுறையை நாளை (வெள்ளிக்கிழமை) முதல் அமல்படுத்தவும் சுகாதாரத்துறையினருக்கு கலெக்டர் முரளிதரன் உத்தரவிட்டுள்ளார்.