கிணற்றில் தவறி விழுந்து தொழிலாளி சாவு
ஓட்டப்பிடாரம் அருகே கிணற்றில் தவறி விழுந்து தொழிலாளி பரிதாபமாக இறந்து போனார்.
ஓட்டப்பிடாரம்:
ஓட்டப்பிடாரம் அருகே கிணற்றில் தவறி விழுந்து தொழிலாளி பரிதாபமாக உயிரிழந்தார்.
புறா குஞ்சு
ஓட்டப்பிடாரம் அருகே பி.துரைச்சாமிபுரம் கிராமத்தைச் சேர்ந்த அப்பாதுரை மகன் அந்தோணிராஜ் (வயது 35). கூலி தொழிலாளி. இவரது மனைவி மாரிச்செல்வி. இவர்களுக்கு ஒரு வயது ஆண் குழந்தை உள்ளது. அந்தோணிராஜ் கட்டிட பணியில் சித்தாளாக வேலை பார்த்து வந்தார். விடுமுறை நாட்களில் கிணறுகளில் புறா பிடித்துக் கொண்டு வந்து உணவு சமைத்து சாப்பிடுவது வழக்கம்.
வழக்கம்போல் நேற்று முன்தினம் மதியம் பி. துரைச்சாமிபுரம் கிராமம் அருகே உள்ள ஒரு கிணற்றில் புறா குஞ்சு எடுப்பதற்காக இறங்கியுள்ளர்.
கிணற்றுக்குள் தவறி விழுந்தார்
அப்போது எதிர்பாராத விதமாக தடுமாறி கிணற்றுக்குள் தவறி விழுந்தார். அவருக்கு நீச்சல் தெரியாததால் சிறிது நேரத்தில் தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
இந்த நிலையில் நீண்நேரமாக அவர் வீடு திரும்பாததால், மனைவி மாரிச்செல்வி அக்கம் பக்கம் தேடிச் சென்றுள்ளார். உறவினர்களும் அவரை தேடியுள்ளனர். அப்போது ஊருக்கு அருகிலுள்ள ஒரு கிணறு அருகில் அவருடைய செருப்பு கிடந்துள்ளது. இதைப்பார்த்து பதறிப்போன அவரது மனைவி கிணற்றுக்குள் பார்த்துள்ளார். அங்கு கிணற்றுக்குள் தண்ணீரில் அந்தோணிராஜ் பிணமாக மிதந்துள்ளதை பார்த்து கூச்சலிட்டுள்ளார். அங்கு உறவினர்களும் குவிந்துள்ளனர்.
உடல் மீட்பு
உடனடியாக இதுகுறித்து அவர்கள் கொடுத்த தகவலின் பேரில் பசுவந்தனை போலீஸ் சப் -இன்ஸ்பெக்டர் சீதாராமன் தலைமையில் போலீசார் அந்த பகுதிக்கு விரைந்து சென்றனர். அவர்கள் கொடுத்த புகாரின் பேரில், ஓட்டப்பிடாரம் தீயணைப்பு துறை அலுவலர் சுப்பையா தலைமையில் வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, கிணற்றுக்குள் இறந்து கிடந்த அந்தோணிராஜ் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பம் குறித்து பசுவந்தனை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.