ராக்கெட் ஏவுதளம் அமையும் பகுதியில் தடுப்பு வேலி அமைக்கும் பணி தீவிரம்

குலசேகரன்பட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம் அமையும் பகுதியில் தடுப்பு வேலி அமைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது

Update: 2022-07-10 13:32 GMT

குலசேகரன்பட்டினம்:

குலசேகரன்பட்டினத்தில் 2 ஆயிரத்து 233 ஏக்கரில் ராக்கெட் ஏவுதளம் அமையவிருக்கும் பகுதியில் நில அளவீடுகள் பணிகள் முடிந்த நிலையில், தடுப்பு வேலிகள் அமைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

ராக்கெட் ஏவுதளம்

விண்வெளி ஆராய்ச்சியில் உச்சத்தை எட்டி வரும் இந்தியாவின் அனைத்து விண்வெளி திட்டங்களும் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள ராக்கெட் ஏவுதளத்தில் இருந்து செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் மத்திய அரசு மற்றொரு ராக்கெட் ஏவுதளத்தை அமைக்க முடிவு செய்தது. ராக்கெட் ஏவுவதற்கு ஏற்ற இடம் நிலநடுக்கோடு பகுதியாகும். இந்த பகுதியிலிருந்து ராக்கெட்டுகளை ஏவுவதால், ராக்கெட்டின் முழு ஆற்றலையும் பயன்படுத்தி செயற்கை கோள்களை ஏவ முடியும். இதனால் அதிக எடை கொண்ட செயற்கைகோள்களையும் எளிதாக விண்ணில் செலுத்த முடியும். ஸ்ரீஹரிகோட்டா நிலநடுக்கோட்டு பகுதியில் இருந்து 13.72டிகிரி வடக்கில் அமைந்து உள்ளது. தொலையுணர்வு செயற்கை கோள்களை தெற்குநோக்கியும், தொலைதொடர்பு செயற்கைகோள்கள் கிழக்கு நோக்கியும் ஏவப்பட்டு வருகின்றன. இங்கு இருந்து ஏவப்படும் அனைத்து ராக்கெட்டுகளும் 104 டிகிரி கோணத்தில் தான் ஏவப்பட்டு வருகிறது. ஆனால் கிழக்கு திசையில் 9 டிகிரி கோணத்தில் ஏவுவதே சிறந்தது. இதனால் ராக்கெட் ஏவுதளம் அமைப்பதற்கு தகுந்த இடம் தேர்வு செய்யும் பணி மேற்கொள்ளப்பட்டது. பல்வேறு கட்டங்களாக நடந்த ஆய்வுக்குப் பின் குலசேகரன்பட்டினம் பகுதி தேர்வு செய்யப்பட்டது. பொதுவாக ராக்கெட் ஏவுதளம் அமையும் இடமானது, காற்றின் வேகம் மணிக்கு 30 கிலோ மீட்டருக்கு குறைவாகவும், குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகாத பகுதியாகவும், புயல், மின்னல் மற்றும் மழையின் தாக்கம் குறைவாக உள்ள பகுதிகளாகவும் இருக்க வேண்டும். நிலையான காலசூழ்நிலை, நல்ல வெளிச்சம், குறைந்த பனி மற்றும் மேகமூட்டம் உள்ள பகுதியாக இருக்க வேண்டும். அந்த வகையில் நிலவியல் ரீதியாக குலசேகரன்பட்டினம் பகுதி ராக்கெட் ஏவுதளம் அமைப்பதற்கு சிறந்த இடமாக கண்டறியப்பட்டு உள்ளது. இங்கு இருந்து தெற்கு நோக்கிய ராக்கெட் ஏவுதல்கள் சிறப்பானது. குலசேகரன்பட்டினம் நிலநடுக்கோட்டில் இருந்து 8.364டிகிரி வடக்கே அமைந்து உள்ளது. இங்கு இருந்து 90டிகிரி தெற்கு நோக்கி ராக்கெட்டுகளை ஏவ முடியும். அதே போன்று கிழக்கு நோக்கிய ஏவுதல்களுக்கு சுமார் 120 டிகிரி கோணத்தில் ஏவ வேண்டும். இது ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து ஏவப்படுவதை விட சற்று அதிகம். இதனால் ஏற்படும் இழப்பை புவியீர்ப்பு சுற்று வேக அதிகரிப்பால் ஏற்படும் விசையை கொண்டு ஈடுகட்ட முடியும் என்று கருதப்படுகிறது. ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட்டில் இருந்து முதலில் பிரியும் பாகம் வங்காள விரிகுடாவிலும், 2-வது பாகம் இந்திய பெருங்கடலிலும் விழும். இதனால் குறைந்த செலவில் ராக்கெட் ஏவுதல்களை மேற்கொள்ள முடியும் என்று முடிவு செய்யப்பட்டு உள்ளது.

நிலம் கையகப்படுத்தும் பணி

இதனையடுத்து இஸ்ரோ சார்பில் ராக்கெட் ஏவுதளம் அமைப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருவதுடன் முதற்கட்டமாக தமிழக அரசிடம் இருந்து நிலத்தை பெறுவதற்கான பணிகள் நடந்து வருகிறது. அதன்படி குலசேகரன்பட்டினம் அருகே 2 ஆயிரத்து 233 ஏக்கர் நிலம் அடையாளம் காணப்பட்டு அந்த நிலங்கள் கையகப்படுத்தும் பணிகள் நடந்து முடிந்துள்ளது. காலி இடங்களுக்கு ஏக்கருக்கு அரசு நிர்ணயித்த விலையை விட கூடுதல் விலை வழங்கப்பட்டது. மேலும் குலசேகரன்பட்டினம் அருகே கடற்கரையை ஒட்டி அரைவட்ட வடிவில் நிலம் எடுக்கப்படுகிறது.

திருச்செந்தூர் தாலுகாவுக்கு உட்பட்ட மாதவன்குறிச்சி, சாத்தான்குளம் தாலுகாவுக்கு உட்பட்ட படுக்கப்பத்து, பள்ளக்குறிச்சி ஆகிய 3 கிராமங்களில் இருந்து நிலங்கள் கையகப்படுத்தப்பட உள்ளன. இதில் 141 ஏக்கர் புறம்போக்கு நிலம் தவிர, மீதம் உள்ள பட்டா நிலங்கள் கையகப்படுத்தும் பணி மேற்கொள்ளப்பட உள்ளது. இதனை 8பகுதியாக பிரித்து பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இஸ்ரோ வசம் ஒப்படைப்பு

இந்த பணிகளுக்கென 8 தாசில்தார்கள் நியமிக்கப்பட்டு, ஒவ்வொரு தாசில்தார் தலைமையிலும் 13பேர் அடங்கிய குழு அமைக்கப்பட்டு இந்த பணிகளை கண்காணிப்பதற்காக ஒரு வருவாய் அலுவலர் மற்றும் உதவி கலெக்டர் அந்தஸ்திலான அதிகாரியும் நியமிக்கப்பட்டு உள்ளார். தற்போது பெரும்பாலான நிலங்கள் கையகப்படுத்தப்பட்டு இஸ்ரோ வசம் ஒப்படைக்கப்பட்டு விட்டது.

தடுப்பு வேலி

இதனையடுத்து ராக்கெட் ஏவுதளம் அமைய உள்ள இடத்தில் நில அளவீடு பணிகள் முடித்து தடுப்பு வேலிகள் அமைக்கும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. இந்த நிலையில் கையகப்படுத்தப்பட்ட நிலத்தில் படுக்கப்பத்து பகுதி எள்ளுவிளை பகுதியிலிருந்து அமராபுரம், கூடல்நகர் உள்ளிட்ட பகுதிகளில் தற்போது கம்பி வேலிகள் அமைப்பதற்காக கான்கீரிட் அமைத்து கற்கள் நடப்பட்டு வருகிறது. தொடர்ந்து விறு விறுப்பாக நடந்து வரும் இந்த பணியானது ஓரிரு மாதங்களில் நிறைவடையும் என்றும் தடுப்பு வேலி அமைக்கும் பணி முடிந்ததும் அடுத்தக்கட்ட பணிகள் தொடங்கப்படும் என அதிகாரிகள் கூறினர்.

Tags:    

மேலும் செய்திகள்