பிரதம மந்திரி பயிர் காப்பீட்டு திட்டத்தில் விவசாயிகள் ராபி பருவ பயிர்களுக்கு காப்பீடு செய்து பயன் பெறலாம்

பிரதம மந்திரி பயிர் காப்பீட்டு திட்டத்தில் விவசாயிகள் ராபி பருவ பயிர்களுக்கு காப்பீடு செய்து பயன் பெறலாம் என கலெக்டர் செந்தில்ராஜ் தெரிவித்துள்ளார்.

Update: 2022-10-12 18:45 GMT

தூத்துக்குடி மாவட்டத்தில் திருந்திய பிரதம மந்திரி பயிர் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் ராபி பருவ பயிர்களுக்கு விவசாயிகள் காப்பீடு செய்து பயன் பெறலாம் என்று மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் தெரிவித்து உள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

பயிர் காப்பீடு

பருவமழை காலங்களில் வெள்ளம், புயல் மற்றும் இயற்கை சீற்றங்களினால் விவசாயிகள் பாதிக்கப்படும் போது, விவசாயிகளின் வாழ்வாதாரத்தையும் வருமானத்தையும் பாதுகாக்கும் வகையில் 2022-2023-ம் ஆண்டில் பிரதம மந்திரி பயிர் காப்பீட்டுத் திட்டத்தை செயல்படுத்துவதற்கான அரசாணைகள் பெறப்பட்டு உள்ளது.

அதன்படி நடப்பாண்டில், தூத்துக்குடி மாவட்டத்தில் கோவில்பட்டி, கயத்தாறு, விளாத்திகுளம், புதூர், ஓட்டப்பிடாரம், கருங்குளம், தூத்துக்குடி, ஆழ்வார்திருநகரி, ஸ்ரீவைகுண்டம், சாத்தான்குளம், திருச்செந்தூர் மற்றும் உடன்குடி வட்டாரங்களில் உள்ள 222 குறுவட்டங்களில் நெல்-3, கம்பு, சோளம், உளுந்து, பாசிபயறு, நிலக்கடலை, எள், சூரியகாந்தி மற்றும் பருத்தி பயிர்கள் அறிவிக்கை செய்யப்பட்டு உள்ளது. மக்காசோளப் பயிருக்கு மட்டும் வருவாய் கிராம மட்டத்தில் 313 வருவாய் கிராமங்களில் அறிவிக்கை செய்யப்பட்டு உள்ளது.

பொது சேவை மையங்கள்

உளுந்து, பாசிப்பயறு ஆகியவற்றை 15.11.2022-க்குள்ளும்; மக்காச்சோளம் மற்றும் பருத்தியை 30.11.2022-க்குள்ளும், சோளம் மற்றும் நிலக்கடலை பயிர்களை 15.12.2022-க்குள்ளும், கம்பு, எள், சூரியகாந்தி பயிர்களை 31.12.2022-க்குள்ளும், நெல்-3 பயிருக்கு 31.01.2023-க்குள்ளும் பதிவு செய்து அனைத்து விவசாயிகளும் இந்த திட்டத்தில் இணைந்து பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இந்த திட்டத்தில் வங்கிகளில் கடன்பெறும் விவசாயிகள் மற்றும் கடன்பெறா விவசாயிகள் அனைவரும் தங்கள் விருப்பத்தின் பேரில் இந்த திட்டத்தின் கீழ் பயிர் காப்பீடு செய்து கொள்ளலாம். காப்பீடு செய்ய விரும்பும் விவசாயிகள் பொது சேவை மையங்கள் மூலமாகவோ வங்கிகள், தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள் மூலமாகவோ பதிவு செய்து கொள்ளலாம்.

எனவே நடப்பு ராபி பருவத்தில் பயிர் சாகுபடி செய்துள்ள அனைத்து விவசாயிகளும் எதிர்பாராத இடர்பாடுகளால் ஏற்படும் பொருளாதார இழப்புகளில் இருந்து காத்துக் கொள்ள இந்த திட்டத்தில் இணைந்து பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். விவசாயிகள் அனைவரும் காப்பீடு செய்வதற்கான கடைசி நாள் வரை காத்திருக்காமல் முன்கூட்டியே பயிர் காப்பீடு செய்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

கட்டணம்

நவரை, கோடை நெற்பயிருக்கு ஏக்கருக்கு ரூ.467-ம், மக்காச்சோள பயிருக்கு ரூ.219-ம், சோளப்பயிருக்கு ரூ.115-ம், கம்பு பயிருக்கு ரூ.109-ம், உளுந்து மற்றும் பாசிப்பயிருக்கு ரூ.209-ம், நிலக்கடலை பயிருக்கு ரூ.265-ம், எள் பயிருக்க ரூ.113-ம், சூரியகாந்தி பயிருக்கு ரூ.150-ம், பருத்திபயிருக்கு ரூ.595-ம், பயிர் காப்பீட்டுக் கட்டணமாக அரசால் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.

விவசாயிகள் இந்த திட்டத்தின் கீழ் பதிவு செய்யும் போது பூர்த்தி செய்து கையொப்பமிட்ட முன்மொழிவு விண்ணப்பத்துடன் கிராம நிர்வாக அலுவலர் வழங்கும் அடங்கல், வங்கிக் கணக்கு புத்தகத்தின் முதல் பக்க நகல், ஆதார் அட்டைநகல் ஆகியவற்றை இணைத்து கட்டணத் தொகையை செலுத்தியபின் அதற்கான ரசீதை பெற்றுக் கொள்ளவேண்டும். காப்பீடு பதிவு செய்யப்படும் அடங்கலில் உள்ள வருவாய் கிராமம், சர்வே எண், சாகுபடி செய்யப்படும் பயிர் மற்றும் பரப்பு, வங்கி கணக்கு எண் முதலான அடிப்படை விவரங்களை ஒப்புகை சீட்டில் சரிபார்த்து பெற வேண்டும். காப்பீடு பதிவின் ஆவணங்கள் மற்றும் ரசீதை விவசாயிகள் பாதுகாப்பாக வைத்து கொள்ள வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்