கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் கருப்பு பன்னீர் திராட்சை கிலோ ரூ.50-க்கு விற்பனை
கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் கருப்பு பன்னீர் திராட்சை கிலோ ரூ.50-க்கு விற்பனை செய்யப்படுகிறது
தேனி மாவட்டம் கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் நெல், வாழை, தென்னை சாகுபடிக்கு அடுத்து கருப்பு பன்னீர் திராட்சை விவசாயம் செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக காமயகவுண்டன்பட்டி, சுருளிப்பட்டி, நாராயணதேவன்பட்டி, ராயப்பன்பட்டி, ஆனைமலையன்பட்டி, கூடலூர், அனுமந்தன்பட்டி, க.புதுப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 10 ஆயிரம் ஏக்கருக்கு அதிகமான அளவில் திராட்சை விவசாயம் நடைபெற்று வருகிறது. கம்பம் பள்ளத்தாக்கு பகுதி ஆண்டுதோறும் திராட்சை பழம் விளையும் இடமாகும்.
இங்கு விளையும் கருப்பு பன்னீர் திராட்சை சென்னை, கோவை, திருச்சி உள்ளிட்ட மாவட்டங்கள், அண்டை மாநிலமான கேரளாவுக்கும் அதிகளவில் அனுப்பப்பட்டு வருகிறது. கருப்பு பன்னீர் திராட்சை மருத்துவ குணம் கொண்டதால் கேரள மக்கள் இதனை விரும்பி சாப்பிடுகின்றனர். இதனால் கேரள மார்க்கெட்டில் கம்பம் பள்ளத்தாக்கு பகுதி திராட்சைக்கு கடும் கிராக்கி இருக்கிறது. இந்நிலையில் கடந்த வாரம் ஒரு கிலோ திராட்சை ரூ.30-க்கு விற்பனை ஆனது. தற்போது கிலோ ரூ. 50-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது, மாநிலம் முழுவதும் தற்போது வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளது, திராட்சைப்பழ வரத்தும் குறைந்துள்ளது. இதனால் திராட்சை பழ விலை உயர்ந்துள்ளது என்றனர்.