நாடாளுமன்ற தேர்தலில்: 40 தொகுதிகளிலும் அ.தி.மு.க. கூட்டணி வெற்றி பெறும் -எடப்பாடி பழனிசாமி

வரும் நாடாளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணி 40 தொகுதிகளிலும் வெற்றி பெறும் என்று எடப்பாடி பழனிசாமி கூறினார்.

Update: 2023-06-18 20:46 GMT

சேலம்,

சேலம் மாவட்டம், ஆத்தூரில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:-

அ.தி.மு.க. தலைமையில் கூட்டணி

மக்கள் பிரச்சினைகளை எதிர்க்கட்சி என்ற முறையில் அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லும் பணியை அ.தி.மு.க. செவ்வனே செய்து வருகிறது. அடுத்த ஆண்டு (2024) நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. தலைமையில் அமையும் கூட்டணி 40 தொகுதிகளிலும் வெற்றி பெறும். இதற்காக கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் முனைப்புடன் பாடுபட வேண்டும்.

மத்திய மந்திரி அமித்ஷா சமீபத்தில் பேசும்போது, தமிழகத்தில் 25 தொகுதிகளில் பா.ஜனதா வெற்றி பெறும் என்பது அவரது சொந்த கருத்து. அ.தி.மு.க.வை பொறுத்தவரையில், கூட்டணி என்பது தேர்தல் நேரத்தில் கொள்கை அடிப்படையில் ஒருமித்த கருத்துள்ள கட்சிகளுடன் அமையும்.

தற்போது தி.மு.க. ஆட்சியில் எந்த ஒரு புதிய திட்டங்களும் கொண்டுவரப்படவில்லை. மின்கட்டணம் பல மடங்கு உயர்த்தப்பட்டு உள்ளது. தி.மு.க. ஆட்சியில் அனைத்து துறைகளிலும் ஊழல் அதிகரித்து உள்ளது. தி.மு.க.வினரின் அராஜகங்களும் கூடி உள்ளது.

தி.மு.க. ஆட்சியில் அரசு ஊழியர்களுக்கும், போலீஸ் அதிகாரிகளுக்குமே பாதுகாப்பு இல்லாத நிலை உள்ளது. மக்களை பற்றியும், எதைப்பற்றியும் கவலைப்படாத அரசாக தி.மு.க. அரசு இருந்து வருகிறது.

எந்த கட்சிக்கும் அடிமை இல்லை

அ.தி.மு.க. எந்த கட்சிக்கும் அடிமை இல்லை. அமலாக்கத்துறை சோதனைக்கு உட்படுத்தப்பட்டு கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜி தொடர்ந்து அமைச்சர் பதவியில் நீடிப்பது அவமானம். ஒரு ஆளுங்கட்சி அமைச்சருக்கு கைதிக்கான எண் வழங்கப்பட்டும் அமைச்சர் பதவியில் தொடர்ந்து நீடிப்பது அரசுக்கு அவப்பெயரை ஏற்படுத்தி உள்ளது.

தி.மு.க. ஆட்சியில் எந்த துறையில் பார்த்தாலும் ஊழல் நடந்து வருகிறது. தி.மு.க. ஆட்சி எப்போது அகற்றப்படும் என்று தமிழக மக்கள் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள். முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஒரு முதல்-அமைச்சர் போல் இல்லாமல் ரவுடியை போல் தொட்டுப்பார், சீண்டிப்பார் என பேசுகிறார். இது முதல்-அமைச்சர் பதவிக்கு அழகு அல்ல.

இவ்வாறு எடப்பாடி பழனிசாமி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்