பழைய காயலில் பொதுமக்கள் திடீர் சாலை மறியல்

பழைய காயலில் பொதுமக்கள் திடீர் சாலை மறியல் போராட்டம் நடத்தினர்.

Update: 2023-09-10 18:45 GMT

ஆறுமுகநேரி:

பழையகாயலில் பொதுஇடத்தை தனிநபர் ஆக்கிரமிக்க முயற்சிப்பதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி பொதுமக்கள் திடீர் சாலைமறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

திடீர் சாலைமறியல்

பழையகாயல் பஜாரில் நேற்று காலையில் தூத்துக்குடி-திருச்செந்தூர் சாலையில் முஸ்லிம் தெருவை சேர்ந்த பொதுமக்கள் திடீரென்று சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். முஸ்லிம் ஜமாத் கமிட்டி தலைவர் அப்துல் நிஷ்தார் தலைமையில் இந்த போராட்டம் நடந்தது. இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

பழைய காயல் பஜாரில் முஸ்லிம் தெரு பகுதியிலுள்ள பொதுஇடத்தை தனிநபர் ஆக்கிரமிக்க எம்.சாண்ட் மணல் அடித்துள்ளதாகவும், அந்த ஆக்கிரமிப்பு முயற்சியை அதிகாரிகள் தடுக்ககோரியும் நடந்த சாலைமறியலில் ஏராளமான ஆண்களும், பெண்களும் கலந்து கொண்டனர்.

இதனால் அந்த சாலையில் போக்குரவத்து நிறுத்தப்பட்டது.

இதுகுறித்து தகவல் அறிந்த ஆத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலமுருகன், சப்-இன்ஸ்பெக்டர் செல்வகுமார் அந்த பகுதிக்கு சென்று மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

பேச்சுவார்த்தையில் உடன்பாடு

பேச்சுவார்த்தையில், பிரச்சினைக்குரிய இந்த இடம் தொடர்பாக பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணப்படும் என போலீஸ் அதிகாரிகள் உறுதி அளித்தனர். இது ஏற்றுக் கொண்டு பொதுமக்கள் சாலைமறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் திருச்செந்தூர் - தூத்துக்குடி சாலையில் சுமார் ½ மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்