நீலகிரியில் 92.54 சதவீதம் பேர் தேர்ச்சி

நீலகிரி மாவட்டத்தில் பிளஸ்-2 பொதுத்தேர்வு முடிவில் 92.54 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றனர்.

Update: 2022-06-20 14:41 GMT

ஊட்டி, 

நீலகிரி மாவட்டத்தில் பிளஸ்-2 பொதுத்தேர்வு முடிவில் 92.54 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றனர்.

பொதுத்தேர்வு முடிவு வெளியீடு

தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக கடந்த கல்வியாண்டு பள்ளிகள் காலதாமதமாக திறக்கப்பட்டது. தொடர்ந்து நேரடி வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தது. கடந்த மாதம் எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-2 பொதுத்தேர்வு நடந்து முடிந்தது. இந்தநிலையில் நேற்று 10, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவு வெளியிடப்பட்டது. தேர்வு முடிவுகள் www.tnresults.nic.in, www.dge1.tn.nic.in என்ற இணையதளங்களில் வெளியிடப்பட்டன.

பிளஸ்-2 பொதுத்தேர்வு முடிவுகள் மாணவ-மாணவிகள் பள்ளிகளில் கொடுத்த செல்போனுக்கு குறுந்தகவல் அனுப்பப்பட்டது. இதன் மூலம் வீடுகளில் இருந்தபடியே மாணவர்கள் தேர்வு முடிவுகளை தெரிந்துகொண்டனர். தாங்கள் தேர்ச்சி பெற்றதை உறவினர்களுக்கு தெரிவித்து மகிழ்ச்சி அடைந்தனர். நீலகிரியில் மாவட்டத்தில் 84 பள்ளிகளில் படித்த பிளஸ்-2 பொதுத்தேர்வை 3,318 மாணவர்கள், 3,696 மாணவிகள் என மொத்தம் 7,014 பேர் எழுதினர்.

92.54 சதவீதம் தேர்ச்சி

தேர்வு முடிவில் 92.54 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றனர். 2,962 மாணவர்கள், 3,529 மாணவிகள் என மொத்தம் 6,491 பேர் தேர்ச்சி பெற்றனர். பிளஸ்-2 பொதுத்தேர்வு முடிவில் தமிழகத்தில் நீலகிரி மாவட்டம் 22-வது இடத்தை பிடித்து உள்ளது. மேலும் மாணவர்கள் 89.27 சதவீதம், மாணவிகள் 95.48 சதவீதம் தேர்ச்சி பெற்று உள்ளனர். மாணவர்களை விட மாணவிகள் தேர்ச்சி விகிதம் 6.21 சதவீதம் ஆகும்.

பொதுத்தேர்வு முடிவுகள் மாணவர்களின் செல்போன் எண்ணுக்கு அனுப்பப்பட்டதால், பள்ளிகளில் மாணவ-மாணவிகள் குறைவாக வந்திருந்தனர். அந்தந்த பள்ளி ஆசிரியர்கள் இணையதளத்தில் முடிவுகளை பார்த்து, பள்ளியில் தேர்ச்சி பெற்றவர்கள் விவரத்தை அறிவிப்பு பலகையில் ஒட்டினர். நடப்பாண்டில் 10, 12-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் ஒரே நாளில் வெளியானது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்