மனைவியின் கள்ளக்காதலன் கொலையில் தொழிலாளி உள்பட 3 பேர் கைது

சுரண்டையில் மனைவியின் கள்ளக்காதலன் கொலையில் தொழிலாளி உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2023-10-01 20:39 GMT

சுரண்டை:

தென்காசி மாவட்டம் சுரண்டை அருகே துரைசாமியாபுரத்தைச் சேர்ந்தவர் சேர்மன். இவருைடய மகன் கோட்டைச்சாமி என்ற சுரேஷ் (வயது 30). கூலி தொழிலாளி. இவருடைய மனைவி அருணாதேவி (25).

சாம்பவர்வடகரையைச் சேர்ந்தவர் வைத்திலிங்கம் மகன் முத்துகுமார் (27). இவர் பீடி கடையில் தொழிலாளியாக வேலை செய்து வந்தார். இவரும், சுரேசும் நண்பர்கள் ஆவர். இந்த நிலையில் முத்துகுமாருக்கும், அருணாதேவிக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு கள்ளக்காதலாக மாறியது.இதையடுத்து அருணாதேவி, கணவர் சுரேஷை விட்டு பிரிந்து கள்ளக்காதலன் முத்துகுமாருடன் சென்று விட்டார். பின்னர் அவர்கள், சுரண்டை வரகுணராமபுரம் முஸ்லிம் பள்ளி தெருவில் வாடகை வீட்டில் வசித்தனர்.

இதனால் ஆத்திரமடைந்த சுரேஷ், அவருடைய தம்பி செல்வம் (29), நண்பரான தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே கால்வாய் கிராமத்தைச் சேர்ந்த பண்டாரம் மகன் மூக்காண்டி (29) ஆகிய 3 பேரும் நேற்று முன்தினம் இரவில் சுரண்டை வரகுணராமபுரத்துக்கு சென்றனர்.

அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த முத்துகுமார், அருணாதேவி ஆகியோரை வழிமறித்து அரிவாளால் வெட்டியதாக கூறப்படுகிறது. இதில் படுகாயமடைந்த முத்துகுமார் பரிதாபமாக இறந்தார். இதனை தடுக்க முயன்றதில் கையில் அரிவாள் வெட்டு காயமடைந்த அருணாதேவி தென்காசி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

இதுகுறித்து சுரண்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து சுரேஷ், செல்வம், மூக்காண்டி ஆகிய 3 பேரையும் நேற்று கைது செய்தனர். கைதான சுரேஷ் போலீசாரிடம் அளித்த பரபரப்பு வாக்குமூலத்தில் கூறியதாவது:-

என்னுடைய நண்பரான முத்துகுமார், எனது மனைவி அருணதேவியுடன் கள்ளக்காதலில் ஈடுபட்டு எனக்கு துரோகம் செய்தார். பின்னர் அவர்கள் தனியாக சென்று குடும்பம் நடத்தினர். இதுகுறித்து நான் போலீசில் புகார் தெரிவித்தும், அருணாதேவி என்னுடன் சேர்ந்து வாழ மறுத்து, முத்துகுமாருடன் செல்வதாக கூறி என்னை அவதூறாக பேசினார். இதனால் என்னுடைய தம்பி செல்வம், நண்பரான மூக்காண்டி ஆகியோருடன் சேர்ந்து முத்துகுமாரை கொலை செய்தேன்.

இவ்வாறு அவர் வாக்குமூலத்தில் கூறினார்.

கைதான சுரேஷ் உள்ளிட்ட 3 பேரையும் போலீசார் தென்காசி கோர்ட்டில் ஆஜர்படுத்தி, பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்