பா.ஜனதா நிர்வாகி கொலையில் தி.மு.க. பிரமுகர் கைது
நெல்லையில் பா.ஜனதா நிர்வாகி கொலை வழக்கில் தி.மு.க. பிரமுகரை போலீசார் கைது செய்தனர்.
நெல்லையில் பா.ஜனதா நிர்வாகி கொலை வழக்கில் தி.மு.க. பிரமுகரை போலீசார் கைது செய்தனர்.
பா.ஜனதா நிர்வாகி கொலை
நெல்லை பாளையங்கோட்டை மூளிக்குளம் விரல்மீண்ட நாயனார் தெருவை சேர்ந்தவர் செல்லையா. இவரது மகன் ஜெகன் (வயது 34). பா.ஜனதா மாநகர இளைஞரணி செயலாளர். திருமணம் ஆகாதவர்.
கடந்த 30-ந் தேதி மூளிக்குளம் பகுதியில் வைத்து ஜெகனை மர்மநபர்கள் அரிவாளால் வெட்டிக்கொலை செய்தனர். இதுகுறித்து பாளையங்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து அதே ஊரைச் சேர்ந்த பாஸ்கர், சந்துரு, மாரிச்செல்வம், பாளையங்கோட்டையை சேர்ந்த அனீஸ், அஜித்குமார், ராஜாகுடியிருப்பு விக்கி என்ற விக்னேஷ்வரன், வி.எம்.சத்திரம் வசந்த், பாளையங்கோட்டை கே.டி.சி. நகரை சேர்ந்த இசக்கிமுத்து, திம்மராஜபுரம் மாணிக்கராஜா, தச்சநல்லூர் முத்துபாண்டி ஆகிய 10 பேரை கைது செய்தனர். நேற்று காலையில் வழக்கில் தொடர்புடைய பாளையங்கோட்டையை சேர்ந்த பரமராஜ் (27) என்பவரையும் போலீசார் கைது செய்தனர்.
தி.மு.க. பிரமுகர் கைது
இதற்கிடையே இந்த கொலை தொடர்பாக மூளிக்குளத்தை சேர்ந்த தி.மு.க. பிரமுகர் பிரபுவை கைது செய்யக்கோரி ஜெகனின் உறவினர்கள் உடலை வாங்க மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இதையடுத்து தனிப்படை போலீசார், பிரவுவை தீவிரமாக தேடி வந்தனர்.
இந்த நிலையில் நேற்று மாலையில் பாளையங்கோட்டை போலீஸ் நிலையத்தில் பிரபு (46) சரண் அடைந்தார். அவரை போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து அவரை மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தி நெல்லை முதலாவது ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு முன்பு ஆஜர்படுத்தினர். மாஜிஸ்திரேட்டு உத்தரவின்பேரில் தி.மு.க. பிரமுகர் பிரபு சிறையில் அடைக்கப்பட்டார்.