நள்ளிரவில் 20 பொக்லைன் எந்திரங்கள் மூலம் நெற்பயிர்களை அழித்து வாய்க்கால் வெட்டும் பணி
என்.எல்.சி. சுரங்கம்-2 விரிவாக்கத்திற்காக நள்ளிரவில் 20 பொக்லைன் எந்திரங்கள் மூலம் நெற் பயிர்களை அழித்து வாய்க்கால் வெட்டும் பணி நடைபெற்றது. இதை பார்த்து கண்ணீர் விட்டு விவசாயிகள் கதறினர்.
சேத்தியாத்தோப்பு,
நெய்வேலியில் என்.எல்.சி. இந்தியா நிறுவனம், 3 சுரங்கங்களில் இருந்து நிலக்கரி வெட்டி எடுத்து, அனல் மின் நிலையங்கள் மூலமாக மின்சாரம் உற்பத்தி செய்கிறது. தற்போது நிலக்கரி தட்டுப்பாட்டால் மின் உற்பத்தி பாதிக்கப்படும் அபாய நிலை ஏற்பட்டுள்ளது. எனவே 2-வது சுரங்கத்தை விரிவாக்கம் செய்து நிலக்கரி வெட்டி எடுக்க என்.எல்.சி. முடிவு செய்துள்ளது. முதற்கட்டமாக சுரங்கம்-2-ல் இருந்து 60 மீட்டர் தூரத்தில் உள்ள பரவனாறுக்கு பதிலாக புதிய பரவனாறு உருவாக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டது.
12 கி.மீ. நீளத்திற்கு புதிய பரவனாறு
ஏனெனில் மழைக்காலங்களில் சுரங்கத்திற்குள் தண்ணீர் புகுவதை தடுக்கவும், சுரங்கத்தில் இருந்து தண்ணீரை வெளியேற்றவும் 12 கிலோ மீட்டர் நீளத்திற்கு புதிய பரவனாறு அமைப்பது அவசியம் என்று என்.எல்.சி. கருதியது.
இதற்காக நிலம் கையகப்படுத்தப்பட்டு ஏற்கனவே 10.5 கிலோ மீட்டர் நீளத்திற்கு புதிய பரவனாறுக்கு வாய்க்கால் வெட்டப்பட்டுள்ளது.
மீதமுள்ள 1½ கிலோ மீட்டர் தூரம் மட்டும் வளையமாதேவி, கத்தாழை, கரிவெட்டி, ஆதனூர், மும்முடிசோழகன் உள்ளிட்ட கிராமங்களில் உள்ள விளை நிலங்களில் வாய்க்கால் வெட்டும் பணி கிடப்பில் போடப்பட்டு இருந்தது. அந்த விளைநிலங்களில் விவசாயிகள் நெல் சாகுபடி செய்திருந்தனர்.
வாய்க்கால் வெட்டும் பணி
இந்த நிலையில் கடந்த 26-ந்தேதி என்.எல்.சி. நிர்வாகம் ராட்சத பொக்லைன் எந்திரங்கள் மூலம் பயிர்களை அழித்து புதிய பரவனாறுக்காக வாய்க்கால் வெட்டும் பணியை தொடங்கியது. இதற்கு விவசாயிகள், அரசியல் கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்தாலும் கூட, பணி தொடர்ந்து நடைபெற்று வந்தது. கடந்த 28-ந்தேதி என்.எல்.சி. அலுவலகத்தை பா.ம.க.வினர் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியதால், அன்றைய தினம் மட்டும் வாய்க்கால் வெட்டும் பணி தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது. அதன்பிறகு பகலில் மட்டும் 1000 போலீஸ் பாதுகாப்புடன் பணி நடைபெற்று வந்தது.
பயிர்கள் அழிப்பு
இந்த நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவு 12 மணிக்கு 20 பொக்லைன் எந்திரங்கள் வரவழைக்கப்பட்டன. இந்த எந்திரங்கள் மூலம் பரவனாறுக்கு வாய்க்கால் வெட்ட விளைநிலங்களில் சாகுபடி செய்திருந்த நெற்பயிர்கள் அழிக்கப்பட்டது. இந்த பணி பலத்த போலீஸ் பாதுகாப்புடன் விடிய, விடிய நடைபெற்றது. நேற்று காலையில் விளைநிலங்களுக்கு சென்ற விவசாயிகள், பயிர்கள் அழிக்கப்பட்டு இருந்ததை கண்டு கதறி அழுதனர். அவர்கள் ஒருவருக்கொருவர் ஆறுதல் கூறி, தாங்களாகவே கலைந்து சென்றனர். புதிய பரவனாறு உருவாக்கம் செய்வதற்கான பணி 80 சதவீதம் முடிவடைந்துள்ளது. மீதமுள்ள 20 சதவீத பணி 2 அல்லது 3 நாளில் முடிவடையும் என்றும், புதிய பரவனாறு திட்டம் நிறைவேறும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.