நடுவழியில் பழுதாகி நின்ற 'லிப்ட்'டில் சிக்கி பரிதவித்த ஊழியர்
நாகர்கோவிலில் 4 மாடி கட்டிடத்தில் பழுதாகி நடுவழியில் நின்ற லிப்ட்டில் சிக்கிய ஊழியரை தீயணைப்பு படையினர் அரை மணி நேரம் போராடி மீட்டனர்.
நாகர்கோவில்,
நாகர்கோவிலில் 4 மாடி கட்டிடத்தில் பழுதாகி நடுவழியில் நின்ற லிப்ட்டில் சிக்கிய ஊழியரை தீயணைப்பு படையினர் அரை மணி நேரம் போராடி மீட்டனர்.
வணிக வளாகம்
நாகர்கோவில் கோர்ட்டு ரோட்டில் ஒரு வணிக வளாக கட்டிடம் உள்ளது. இந்த கட்டிடம் தரைதளம் மற்றும் 4 மாடிகளைக் கொண்டதாகும். இந்த கட்டிடத்தில் வங்கி, அலுவலகங்கள், இன்சூரன்ஸ் நிறுவனம் போன்றவை செயல்பட்டு வருகிறது. இதனால் இந்த வணிக வளாகத்தில் பணியாற்றும் ஊழியர்கள், அவற்றுக்கு வந்து செல்லும் பொதுமக்கள் ஆகியோரின் பயன்பாட்டுக்காக 2 இடங்களில் லிப்ட் வசதி செய்யப்பட்டுள்ளது.
இந்தநிலையில் நேற்று காலை வழக்கம்போல் இந்த வணிக வளாகத்தில் உள்ள அலுவலகங்களில் பணியாற்றும் ஊழியர்கள் வந்து, தங்களது அலுவலகங்கள் அமைந்துள்ள பகுதிகளுக்கு லிப்ட்டை பயன்படுத்திச் சென்று வந்தனர்.
சிக்கிய ஆபரேட்டர்
இந்த லிப்ட்டில் பெருஞ்சிலம்பு பகுதியைச் சேர்ந்த ஜான்சன் (வயது 60) என்பவர் ஆபரேட்டராக பணியாற்றிக் கொண்டிருந்தார். இந்தநிலையில் மேல்மாடிகளுக்கு சென்ற ஊழியர்களை அவரவர்கள் தளங்களில் இறக்கிவிட்டு, தரைதளத்துக்கு ஆபரேட்டர் ஜான்சன் லிப்ட்டில் வந்து கொண்டிருந்தார். அந்த லிப்ட் முதல்மாடியில் வந்து கொண்டிருந்தபோது திடீரென பழுதாகி 1-வது மாடிக்கும், தரை தளத்துக்கும் இடையே நடுவழியில் நின்றது.
இதனால் ஆபரேட்டர் ஜான்சன் லிப்ட்டில் இருந்து வெளியே வரமுடியாமல் தவித்தார். அவர் லிப்ட்டை தட்டியபடி வெளியில் இருந்தவர்களுக்கு தகவல் கொடுத்தார். இதுபற்றி அறிந்த அந்த வணிக வளாகத்தில் உள்ளவர்கள் தீயணைப்பு படையினருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் மாவட்ட உதவி தீயணைப்பு அதிகாரி துரை தலைமையிலான தீயணைப்பு படையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர்.
மீட்பு
பின்னர் அவர்கள், தரைதளத்துக்கும், 1-வது தளத்துக்கும் இடையே அந்தரத்தில் நின்று கொண்டிருந்த லிப்ட்டை முதலில் தரைதளத்துக்கு கொண்டு வருவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டனர். பின்னர் லிப்ட்டில் சிக்கியிருந்த ஜான்சனை, லிப்ட் கதவை கம்பியால் நெம்பி திறந்து வெளியே கொண்டு வந்தனர். சுமார் 1 மணி நேரமாக லிப்டுக்குள் சிக்கித் தவித்த ஜான்சனை தீயணைப்பு படையினர் சுமார் அரை மணி நேரம் போராடி மீட்டனர். அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. அவர், தீயணைப்பு படையினருக்கு நன்றி தெரிவித்தார். ஜான்சன் லிப்ட் ஆபரேட்டர் என்பதால் அவர் பதற்றம் இன்றி இருந்ததாக தீயணைப்பு படையினர் தெரிவித்தனர்.
இந்த வணிக வளாகத்தில் உள்ள மற்றொரு லிப்ட்டில் கடந்த சில தினங்களுக்கு முன் ஒருவர் சிக்கினார். அவரையும் தீயணைப்பு படையினர் போராடி மீட்டனர்.
வேண்டுகோள்
இதேபோல் சமீப காலமாக வணிக வளாகங்கள், ஓட்டல்கள், திருமண மண்டபங்களில் உள்ள லிப்ட்டுகளில் பொதுமக்கள் சிக்கிக் கொள்ளும் சம்பவங்கள் அடிக்கடி நிகழ்ந்து வருகிறது. இதற்கு லிப்ட்டை சரியாக பராமரிக்காததே காரணம் என்று தீயணைப்பு படையினர் கூறுகிறார்கள்.
எனவே ஓட்டல்கள், திருமண மண்டபங்கள், வணிக வளாகங்களில் உள்ள லிப்ட்டுகளை அவற்றின் உரிமையாளர்கள் முறையாக பராமரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தீயணைப்பு துறையினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.