கடந்த 6 நாட்களில் விவேகானந்தர் மண்டபத்தை50 ஆயிரம் பேர் பார்வையிட்டனர்

கடந்த 6 நாட்களில் விவேகானந்தர் மண்டபத்தை 50 ஆயிரம் சுற்றுலா பயணிகள் பார்வையிட்டுள்ளனர்.

Update: 2022-10-07 21:23 GMT

கன்னியாகுமரி :

கடந்த 6 நாட்களில் விவேகானந்தர் மண்டபத்தை 50 ஆயிரம் சுற்றுலா பயணிகள் பார்வையிட்டுள்ளனர்.

விவேகானந்தர் மண்டபம்

சுற்றுலாத்தலமான கன்னியாகுமரிக்கு தினமும் ஆயிரக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வந்து செல்கிறார்கள். அவ்வாறு வரும் சுற்றுலா பயணிகள் அதிகாலையில் சூரிய உதயத்தை பார்த்து விட்டு முக்கடல் சங்கமத்தில் புனித நீராடி பகவதி அம்மனை தரிசனம் செய்வார்கள்.

பிறகு கடலின் நடுவே அமைந்துள்ள விவேகானந்தர் நினைவு மண்டபம் மற்றும் 133 அடி உயர திருவள்ளுவர் சிலையை படகில் சென்று பார்வையிடுகிறார்கள். இதற்காக பூம்புகார் கப்பல் போக்குவரத்துக் கழகம் சார்பில் படகுகள் இயக்கப்பட்டு வருகிறது. அதன்படி படகு சேவை தினமும் காலை 8 மணிக்கு தொடங்கி மாலை 4 மணி வரை நடைபெறுகிறது.

50 ஆயிரம் பேர் பார்வையிட்டனர்

பள்ளி காலாண்டு மற்றும் ஆயுதபூஜை, விஜயதசமி தொடர் விடுமுறையையொட்டி கன்னியாகுமரிக்கு சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதி வருகிறது. எனவே நீண்ட வரிசையில் காத்திருந்து படகில் சென்று விவேகானந்தர் நினைவு மண்டபத்தை ஆர்வமுடன் பார்வையிட்டனர்.

அந்த வகையில் கடந்த 1-ந் தேதி 7 ஆயிரத்து 600, 2-ந் தேதி 9 ஆயிரத்து 800, 3-ந் தேதி 9 ஆயிரத்து 400, 4-ந் தேதி 9 ஆயிரத்து 800, 5-ந் தேதி 4 ஆயிரத்து 750, 6-ந் தேதி 9 ஆயிரம் என 50 ஆயிரத்து 350 சுற்றுலா பயணிகள் விவேகானந்தர் நினைவு மண்டபத்தை பார்வையிட்டுள்ளனர்.

தற்போது திருவள்ளுவர் சிலைக்கு ரசாயனக் கலவை பூசும் பணி தொடங்கியுள்ளதால் திருவள்ளுவர் சிலைக்கு படகு போக்குவரத்து ரத்து செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்