கனியாமூர் கலவரத்தில் பள்ளி சொத்துகளை சேதப்படுத்தியதாக மேலும் 2 பேர் கைது
கனியாமூர் கலவரத்தில் பள்ளி சொத்துகளை சேதப்படுத்தியதாக மேலும் 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
சின்னசேலம் அருகே கனியாமூரில் உள்ள சக்தி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கடந்த ஜூலை மாதம் 17-ந் தேதி கலவரம் நடந்தது. இந்த கலவரத்தின்போது, பள்ளி சொத்துகள் மற்றும் பள்ளி பேருந்துகளுக்கு தீ வைத்து எரித்ததோடு, போலீஸ் வாகனங்களுக்கும் தீ வைத்து கொளுத்தப்பட்டது. இந்த கலவரத்திற்கு தூண்டியவர்கள் மற்றும் கலவரத்தில் கலந்து கொண்டு பள்ளி சொத்துகளை சேதப்படுத்தியவர்களை சிறப்பு புலனாய்வு குழுவினர் கைது செய்து வருகின்றனர். அந்த வகையில் பள்ளி சொத்துகளை சேதப்படுத்தியதாக சின்ன சேலம் தாலுகா சிறுவத்தூர் கிராமம் அம்மன் நகரை சேர்ந்த மேகநாதன் மகன் சரண்குமார் (வயது 23), உலகங்காத்தான் கிராமம் திம்மையா நகரை சேர்ந்த சுப்பிரமணி மகன் ராஜ் (23) ஆகியோரை வீடியோ ஆதாரங்களை வைத்து கள்ளக்குறிச்சி சிறப்பு புலனாய்வு போலீசார் கைது செய்து கள்ளக்குறிச்சி 2-வது குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.