குமரி மாவட்டத்தில் புதுமைப்பெண் திட்டத்தில் கல்லூரி மாணவிகளுக்கு மாதம் ரூ.1000

குமரி மாவட்டத்தில் புதுமைப்பெண் திட்டத்தில் கல்லூரி மாணவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் வரவேற்பு பெட்டகத்தை கலெக்டர் அரவிந்த் வழங்கினார்.

Update: 2022-09-05 19:33 GMT

நாகர்கோவில்:

குமரி மாவட்டத்தில் புதுமைப்பெண் திட்டத்தில் கல்லூரி மாணவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் வரவேற்பு பெட்டகத்தை கலெக்டர் அரவிந்த் வழங்கினார்.

புதுமைப்பெண் திட்டம்

சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் நினைவு உயர்கல்வி உறுதித் திட்டத்தின் கீழ் புதுமைப் பெண் திட்டத்தினை நேற்று தமிழக முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையில் இருந்தவாறு காணொலி காட்சி வாயிலாக தொடங்கி வைத்தார். தொடர்ந்து நாகர்கோவில் ஸ்காட் கிறிஸ்தவக் கல்லூரி கலையரங்கில் புதுமைப்பெண் திட்டத்தின் கீழ் கல்லூரி மாணவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் வரவேற்பு பெட்டகம் அளிக்கும் நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு மாநகராட்சி மேயர் மகேஷ் முன்னிலை வகித்தார். குமரி மாவட்ட கலெக்டர் அரவிந்த் மாணவிகளுக்கு வரவேற்பு பெட்டகத்தை வழங்கி கூறியதாவது:-

தமிழக முதல்-அமைச்சர் இன்றையதினம் (அதாவது நேற்று) புதுமைப்பெண் திட்டத்தினை தொடங்கி வைத்துள்ளார். புதுமைப்பெண் திட்டத்தின் நோக்கம் பெண்களுக்கு உயர்கல்வி அளிப்பதன் மூலம் பாலின சமத்துவத்தை ஏற்படுத்துதல், குழந்தை திருமணத்தைத் தடுத்தல். குடும்ப சூழ்நிலை மற்றும் வறுமை காரணமாக மேற்படிப்பு படிக்க இயலாத மாணவிகளுக்குப் பொருளாதார ரீதியாக உதவுதல், பெண் குழந்தைகளின் இடைநிற்றல் விகிதத்தைக் குறைத்தல் போன்றவை ஆகும்.

ரூ.1000 உதவித்தொகை

இத்திட்டத்தின் மூலம் சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் மூலம் செயல்படுத்தப்படும் மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் உயர்கல்வி உறுதித் திட்டத்தின் கீழ் அரசுப் பள்ளிகளில் 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை பயின்று மேற்படிப்பில் சேரும் அனைத்து மாணவிகளுக்கும், சான்றிதழ் படிப்பு, பட்டயப்படிப்பு, பட்டப்படிப்பு, தொழிற்கல்வி ஆகியவற்றில் இடைநிற்றல் இன்றி கல்வி பயின்று முடிக்கும் வரை மாதம் ரூ.1000 அவர்களின் வங்கிக் கணக்கிற்கு நேரடியாக செலுத்தப்படும். இந்த மாணவிகள் ஏற்கனவே பிற கல்வி உதவித் தொகை பெற்று வந்தாலும் இத்திட்டத்தில் கூடுதலாக உதவி பெறலாம்.

இவ்வாறு அவர் கூறினார்.

நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அதிகாரி சிவப்பிரியா, நாகர்கோவில் மாநகராட்சி ஆணையர் ஆனந்த் மோகன், ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி டீன் திருவாசகமணி, மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரி புகழேந்தி, மாவட்ட சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அதிகாரி சரோஜினி, நாகர்கோவில் மாநகராட்சி துணை மேயர் மேரி பிரின்சி லதா, ஐ.ஓ.பி. வங்கி முதன்மை மண்டல மேலாளர் சத்தியநாராயணன், ஸ்காட் கிறிஸ்தவ கல்லூரி முதல்வர் எட்வர்ட், முன்னோடி வங்கி மேலாளர் பிரவீன்குமார் மற்றும் மாணவிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்