கேரளாவுக்கு கடத்த தோட்டத்தில்பதுக்கிய 3டன் ரேஷன் அரிசி பறிமுதல்

கோவில்பட்டி அருகே கேரளாவுக்கு கடத்த தோட்டத்தில் பதுக்கிய 3டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.

Update: 2023-06-04 18:45 GMT

கோவில்பட்டி அருகே கேரளாவுக்கு கடத்துவதற்கு தோட்டத்தில் பதுக்கி வைக்கப்பட்டு இருந்த 3 டன் ரேஷன் அரிசி மூட்டைகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.

தோட்டத்தில் ேசாதனை

தூத்துக்குடி குடிமை பொருள் வழங்கல் குற்ற புலனாய்வு பிரிவு போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில், இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) அல்பின் பிரிஜிட் மேரி தலைமையில் ஏட்டுக்கள் கந்தசுப்பிரமணியன், பூலையா நாகராஜன் ஆகியோர் அடங்கிய போலீசார் கயத்தாறு-கோவில்பட்டி பைபாஸ் ரோட்டில் சவலப்பேரி அருகே திடீர் சோதனை நடத்தினர். அப்போது அந்த பகுதியில் உள்ள ஒரு தோட்டத்தில் வெள்ளாளங்கோட்டையை சேர்ந்த உச்சிமாகாளி (வயது 40) என்பவர் சாக்கு மூட்டைகளை அடுக்கி கொண்டு இருந்தார். உடனடியாக போலீசார் அங்கு சென்று விசாரணை நடத்தினர். அப்போது உச்சிமாகாளி முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தாராம். இதில் சந்தேகம் அடைந்த போலீசார், அங்கு இருந்த மூட்டைகளை சோதனை செய்தனர். அதில் தலா 40 கிலோ எடை கொண்ட 75 மூட்டைகளில் மொத்தம் 3 ஆயிரம் கிலோ ரேஷன் அரிசி பதுக்கி வைக்கப்பட்டு இருப்பது தெரியவந்தது.

கேரளாவுக்கு கடத்த...

உடனடியாக போலீசார் உச்சிமாகாளியை மடக்கி பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில், திருமங்கலக்குறிச்சியை சேர்ந்த முருகன், ஈசுவரன் ஆகியோருடன் சேர்ந்து, குறைந்த விலைக்கு ரேஷன் அரிசியை வாங்கி கேரளாவுக்கு கடத்துவதற்காக பதுக்கி வைத்து இருந்தது தெரியவந்தது.

இதனை தொடர்ந்து தூத்துக்குடி குடிமை பொருள் வழங்கல் மற்றும் குற்றபுலனாய்வு துறை போலீசார் உச்சிமாகாளி, முருகன், ஈசுவரன் ஆகிய 3 பேர் மீது வழக்கு பதிவு செய்தனர். உச்சிமாகாளியை கைது செய்தனர். அவரிடம் இருந்து 3 டன் ரேஷன் அரிசியையும் பறிமுதல் செய்தனர். மேலும் முருகன், ஈசுவரன் ஆகிய 2 பேரையும் தேடி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்