முதல்அரையாண்டில் தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியின் நிகர லாபம் ரூ.496.51 கோடியாக உயர்வு

முதல்அரையாண்டில் தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியின் நிகர லாபம் ரூ.496.51 கோடியாக உயர்ந்துள்ளது.

Update: 2022-10-27 18:45 GMT

தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியின் முதல் அரையாண்டில் நிகர லாபம் ரூ.496.51 கோடியாக உயர்ந்து உள்ளது.

நிதிநிலை அறிக்கை

தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி 1921-ம் ஆண்டு தொடங்கப்பட்டு சிறப்பாக செயல்பட்டு வரும் பாரம்பரியம் மிக்க பழமையான தனியார் துறை வங்கி ஆகும். இந்த வங்கி தொடர்ந்து 100 வருடகாலத்துக்கு மேலாக லாபம் ஈட்டி வருவது குறிப்பிடத்தக்கது. வங்கியானது 509 கிளைகள் மற்றும் 12 மண்டல அலுவலகங்கள் ஆகியவற்றை கொண்டுள்ளது. நாட்டில் உள்ள 16 மாநிலங்கள் மற்றும் 4 யூனியன் பிரதேசங்களில் தனது விரிவாக்கத்தை ஏற்படுத்திக் கொண்டு ஏறத்தாழ 5 மில்லியனுக்கும் அதிகமான வாடிக்கையாளர்களுக்கு சேவையாற்றி வருகிறது.

இந்த வங்கியின் இயக்குனர் குழு கூட்டம் சென்னையில் நேற்று நடந்தது. இந்த கூட்டத்தில் 2022 – 23-ம் ஆண்டுக்கான முதல் அரையாண்டின் நிதிநிலை தணிக்கை முடிவுகள் இறுதி செய்யப்பட்டன. வங்கியின் நிர்வாக இயக்குனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி எஸ். கிருஷ்ணன் தணிக்கை செய்யப்பட்ட முதல் அரையாண்டு நிதிநிலை அறிக்கையை வெளியிட்டார். நிகழ்ச்சியில் பொதுமேலாளர்கள், தலைமை நிதிஅதிகாரி மற்றும் மூத்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

2022 - 23-ம் ஆண்டு முதல் அரை நிதியாண்டில் வங்கியானது பல்வேறு குறிப்பிடத்தக்க சாதனைகளை புரிந்துள்ளது. இதற்கு வங்கியின் திட்டமிட்ட நேர்த்தியான கொள்கைகளும், இயக்குனர் குழு தரும் உற்சாகம், உயர்நிர்வாகக்குழுவின் சீரிய திட்டம் மற்றும் அதனை செயல்படுத்தும் அணுகுமுறை, வங்கி ஊழியர்களின் அயராத உழைப்பும் மற்றும் வாடிக்கையாளர்கள் தொடர்ந்து தரும் ஆதரவு ஆகியவை தான் சாதனையை எட்டிப்பிடிக்க உதவியது. இந்த அரை நிதியாண்டில் வங்கி தனது மொத்த வணிகத்தில் 7.43 சதவீதம் வளர்ச்சி அடைந்து ரூ.78,013.12 கோடியை எட்டி உள்ளது. வைப்புத்தொகை ரூ.43,163.65 கோடியாக உள்ளது. கடன்களை பொறுத்தவரை ரூ.34,876.53 கோடி என்ற நிலையில் உள்ளது நடப்பு மற்றும் சேமிப்புக் கணக்கு தொகை 15.32 சதவீதம் வளர்ச்சி அடைந்து`ரூ.13,192.64 கோடியாக உள்ளது

கடன் வழங்கல்

வங்கியானது விவசாயம் குறு, சிறு தொழில் கடன், வியாபாரக்கடன், வீட்டுக்கடன் மற்றும் கல்விக்கடன் துறைகளுக்கு தொடர்ந்து அதிக முக்கியத்துவம் கொடுத்து வருகிறது. முன்னூரிமைத் துறைகளுக்கு வழங்கப்பட்டுள்ள மொத்த கடன்கள் ரூ.22,878.78 கோடியில் இருந்து ரூ.25,079.09 கோடியாக உயர்ந்து உள்ளது. இதன் வளர்ச்சி விகிதம் 9.61 சதவீதம் ஆகும். முன்னுரிமைத்துறைகளுக்கான கடன்கள் பாரத ரிசர்வ் வங்கி நிர்ணயித்துள்ள இலக்கான 40 சதவீதம் என்ற இலக்கைவிட அதிகமாக 66.64 சதவீதம் என்ற விகிதத்தில் உள்ளது. விவசாயத் துறைகளுக்கு வழங்கப்பட்ட மொத்த கடன்கள்`ரூ.10,386.43 கோடியாக உள்ளது. விவசாயதுறையில் மொத்தகடன்களில் 29.78 சதவீதம் கடன் வழங்கி உள்ளது குறிப்பிடத்தக்கது.

சிறு, குறு துறைகளுக்கு வழங்கப்பட்ட மொத்த கடன்கள் ரூ.11,662.74 கோடியில் இருந்து`ரூ.12,689.76 கோடியாக உயர்ந்து உள்ளது. இதன் வளர்ச்சி விகிதம் 8.81 சதவீதம் ஆக உள்ளது. வங்கியின் வைப்புத்தொகை ரூ.41,022.61 கோடியில் இருந்து ரூ.43,136.65 கோடியாக உயர்ந்துள்ளது. நடப்பு மற்றும் சேமிப்புக் கணக்கு தொகை ரூ.11,439.32 கோடியில் இருந்துரூ.13,192.64 கோடியாக உயர்ந்துள்ளது. இது15.33 சதவீதம் வளர்ச்சியை எட்டியுள்ளது. கடன்தொகை ரூ.31,597.66 கோடியில் இருந்து ரூ.34,876.53 கோடியாக உயர்ந்துள்ளது. இது10.38 சதவீதம் வளர்ச்சியை எட்டியுள்ளது.

நிகரலாபம்

வங்கியின் செயல்பாட்டுலாபம் ரூ.763.36 கோடியாக உள்ளது. நிகரலாபம் ரூ.392.08 கோடிில் இருந்து ரூ.496.51 கோடியாக உயர்ந்து உள்ளது. 26.63 சதவீதம் வளர்ச்சியடைந்து உள்ளது. நிகரவட்டிவருவாய் ரூ.1,032.57 கோடியாக உள்ளது.18.04 சதவீதம் வளர்ச்சியடைந்துள்ளது. நிகரமதிப்பு ரூ.6,461.20 கோடியாக உயர்ந்துள்ளது. மொத்த வாராக்கடன் மொத்த கடனுக்கு 1.70 சதவீதம் ஆகவும், நிகர வாராக்கடன் 0.86 சதவீதமாகவும் உள்ளது.

முதல் அரைநிதியாண்டில் பொதுவெளியீட்டின் மூலம் ரூ.831.68 கோடி திரட்டி உள்ளது. இது மூலதனப்பெருக்கத்திற்குபங்களித்து உள்ளது. பங்குகள் பி.எஸ்.இ மற்றும் என்.எஸ்.இ-யில் பட்டியலிடப்பட்டு உள்ளதால் ரிசர்வ் வங்கி கிளை விரிவாக்கத்துக்கான கட்டுப்பாடுகளை விலக்கி கொண்டது. புதிதாக 4 ஏடிஎம் மையங்கள் திறக்கப்பட்டுள்ளது, வங்கியின் மொத்த ஏடிஎம் மையங்களின் எண்ணிக்கை 1,145 ஆகும். மேலும் வங்கி கிளைகள் விரிவாக்கம் சாத்தியமான இடங்களில் அதிக அளவில் விரைவாக நிறுவப்பட உள்ளது. டிஜிட்டல் முயற்சிகள் மற்றும் டிஜிட்டல் பேங்கிங் யூனிட் வணிகம் பன்மடங்கு வளர புதிய வாய்ப்புகளை உருவாக்குகிறது. புதியவகை கடன்அட்டைகள், சேமிப்பு, நடப்புக்கணக்கு வாடிக்கையாளர்களுக்கு அறிமுகம் செய்யப்பட உள்ளது. இதன் மூலம் சுழற்சி முறை கடன் பெற இயலும். புதிய புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் மூலம் புதிய டிஜிட்டல் மூலம் பங்குசந்தை பரிவர்த்தனைகள் வழங்கவும் திட்டமிடப்பட்டு உள்ளது.

இவ்வாறு நிதிநிலை அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்