ஊட்டியில் வார்டு மறுசீரமைப்பு பணிகளை முறையாக மேற்கொள்ள வேண்டும்- நகராட்சி கூட்டத்தில் வலியுறுத்தல்

ஊட்டியில் வார்டு மறுசீரமைப்பு பணிகளை முறையாக மேற்கொள்ள வேண்டும் என்று நகராட்சி கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

Update: 2022-06-01 14:28 GMT

ஊட்டி

ஊட்டியில் வார்டு மறுசீரமைப்பு பணிகளை முறையாக மேற்கொள்ள வேண்டும் என்று நகராட்சி கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

நகராட்சி கூட்டம்

ஊட்டி நகராட்சி மாதாந்திர கூட்டம் நடந்தது. இதற்கு தலைவர் வாணீஸ்வரி தலைமை வகித்தார். துணைத்தலைவர் ரவிக்குமார், நகராட்சி ஆணையாளர் காந்திராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் கலந்துகொண்ட கவுன்சிலர்கள் பேசியதாவது:-

ஜார்ஜ் (தி.மு.க.,) : ஊட்டியில் குடியிருப்புகள் கட்ட அனுமதி கேட்டு விண்ணப்பித்தவர்களில் 1½ ஆண்டுகளாகியும் பலருக்கும் அனுமதி கிடைக்காமல் உள்ளது. இதனால், அவர்கள் வங்கிகளில் வாங்கிய கடன்களை திருப்பி செலுத்த முடியவில்லை. எனவே, குடியிருப்புகள் கட்ட நகராட்சி நிர்வாகம் விரைந்து அனுமதியளிக்க வேண்டும்.

நகராட்சி பூங்காக்களை சீரமைக்க வேண்டும். வார்டு மறுசீரமைப்பு பணிகளை முறையாக மேற்கொள்ள வேண்டும். ஆணையாளர்:- குடியிருப்புகளுக்கு அனுமதி வழங்குவது குறித்த வழக்கு உள்ளது. ஆனாலும் விரைந்து அனுமதி அளிப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

அறிவிப்பு பலகைகள்

முஸ்தபா (தி.மு.க.,) :- ஊட்டியில் தண்ணீர் பிரச்சனையை தீர்க்க வேண்டும். சுற்றுலா பயணிகளை ஈர்க்க கூடிய வகையில் ஏ.டி.சி., ஜெ.எஸ்.எஸ்., சந்திப்பு பகுதிகளில் அறிவிப்பு பலகைகள் மற்றும் பூங்காக்கள் அமைக்க வேண்டும்.

ஆணையாளர்:- ஊட்டிக்கு மார்லிமந்து மற்றும் டைகர்ஹில் அணையில் இருந்து மோட்டார் மூலம் தண்ணீர் எடுத்து பாம்பே கேசில் உட்பட நகரின் சில பகுதிகளுக்கு தண்ணீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. இந்த திட்டம் செயற்பாட்டுக்கு வந்தால், தண்ணீர் பிரச்னை இருக்காது.

தம்பி இஸ்மாயில் (தி.மு.க.,) : காந்தல் பகுதியில் ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க வேண்டும். சாலைகளை சீரமைக்க வேண்டும்.

ரவி (தி.மு.க.,) : எல்க்ஹில் பகுதியில் கடந்த வாரம் பெய்த மழையால் பல இடங்களில் தடுப்பு சுவர் இடிந்து விழுந்து வீடுகள் சேதமடைந்துள்ளன.

அலங்கார வளைவு

அபுதாகீர் (தி.மு.க.,) :ஊட்டி உருவாகி 200 ஆண்டுகள் ஆவதால், நகரின் நுழைவு வாயில் பகுதிகளில் அலங்கார வளைவு அமைக்க வேண்டும். தூய்மை பணியாளர்களின் குடியிருப்புக்களை சீரமைத்து தர வேண்டும்.

கீதா (தி.மு.க.,) : ஊட்டி நகராட்சிக்குட்பட்ட பெரும்பாலான பகுதிகளில் தெரு விளக்கு எரியாததால், டெண்டர் எடுத்தவர்களை மாற்றம் செய்ய வேண்டும்.நாகமணி (தி.மு.க.,) : ஊட்டி நகராட்சியில் பொக்லைன் எந்திரங்கள் போதுமான அளவில் இல்லை. இதனால் மழை சீரமைப்பு பணிகளை மேற்கொள்வதிலும் தொய்வு ஏற்பட்டு உள்ளது.இதைத் தொடர்ந்து, கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Tags:    

மேலும் செய்திகள்