மாவட்டத்தில் அரசு உத்தரவை மீறி பள்ளிகள் திறப்பு
தேனி மாவட்டத்தில் அரசு உத்தரவை மீறி பள்ளிகள் திறக்கப்பட்டன.
தமிழகத்தில் வெயிலின் தாக்கம் கடுமையாக இருப்பதால் கோடை விடுமுறை முடிந்து பள்ளிகளை திறப்பது தள்ளிப்போகிறது. நாளை (புதன்கிழமை) பள்ளிகள் திறக்கும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில், 6 முதல் 12-ம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு வருகிற 12-ந்தேதியும், 1 முதல் 5-ம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு வருகிற 14-ந்தேதியும் பள்ளிகள் திறக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி நேற்று அறிவித்தார்.
ஆனால், அரசு உத்தரவை மீறி தேனி மாவட்டத்தில் நேற்று பல்வேறு தனியார் பள்ளிகள் திறக்கப்பட்டன. 10, 11, 12-ம் வகுப்பு மாணவ, மாணவிகள் பள்ளி பஸ்களில் அழைத்து வரப்பட்டனர். காலை நேரத்தில் சாலையோரம் மாணவ, மாணவிகள் பலர் பள்ளிச் சீருடையில் பஸ்சுக்காக காத்திருந்தனர். பள்ளி பஸ்களில் அவர்கள் சென்றனர். மாலை பள்ளி முடிந்து வீடு திரும்பினர். அரசு உத்தரவை மீறி பள்ளிகள் திறக்கப்பட்ட போதிலும், கல்வித்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை என்று பெற்றோர்கள் குற்றம்சாட்டினர்.