மாவட்டத்தில்வாழைத்தார் விளைச்சல் அமோகம்:விலை உயர்வால் விவசாயிகள் மகிழ்ச்சி

கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் வாழைத்தார் அமோகமாக விளைச்சல் அடைந்துள்ளது.

Update: 2023-02-04 18:45 GMT

கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் முல்லைப்பெரியாறு பாசனத்தின் மூலம் நெல், கரும்புக்கு அடுத்தபடியாக வாழை அதிக அளவில் சாகுபடி செய்யப்படுகிறது. குறிப்பாக கடைமடை பகுதியான உப்புக்கோட்டை, பாலார்பட்டி, கூழையனூர், குண்டல்நாயக்கன்பட்டி, கோட்டூர், சீலையம்பட்டி ஆகிய பகுதிகளில் கற்பூரவல்லி, நாலிபூவன், நாட்டுவாழை, ரஸ்தாலி, திசுவாழை போன்றவை 1,000 ஏக்கரில் சாகுபடி செய்யபட்டுள்ளது.

போதிய நீர்வரத்து மற்றும் நோய் தாக்குதல் குறைவாக இருப்பதால் வாழை அமோக விளைச்சல் அடைந்துள்ளது. இதற்கிடையே வரத்து குறைவால் வாழைத்தார் விலை அதிகரித்துள்ளது. கடந்த வாரம் கிலோ ரூ.20-க்கு விற்ற திசு வாழைக்காய் தற்போது கிலோ ரூ.30-க்கு விற்பனையாகிறது. நாலிபூவன் ரூ.25 முதல் ரூ.40 வரையிலும், செவ்வாழை ரூ.35 முதல் ரூ.50 வரையும் காயின் தரத்திற்கு ஏற்ப விற்பனை செய்யப்படுகிறது.

இதுகுறித்து விவசாயி ஒருவர் கூறுகையில், நான் ஒரு ஏக்கரில் வாழை சாகுடி செய்துள்ளேன். நல்ல மழை, கிணற்று பாசனம் மூலம் வாழை அமோக விளைச்சல் அடைந்துள்ளது. தற்போது வாழைத்தார் விலையும் அதிகரித்துள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மேலும் வெளி மாநிலங்களை சேர்ந்த வியாபாரிகள் அதிக அளவில் எங்கள் பகுதிக்கு வந்து வாழைத்தார்களை கொள்முதல் செய்து வருகின்றனர் என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்