மாவட்டத்தில் உள்ளமுருகன் கோவில்களில் ஆடி கிருத்திகை வழிபாடு

மாவட்டத்தில் உள்ள முருகன் கோவில்களில் ஆடி கிருத்திகை வழிபாடு நடைபெற்றது

Update: 2023-08-09 21:27 GMT

மாவட்டத்தில் உள்ள முருகன் கோவில்களில் ஆடி கிருத்திகையையொட்டி சிறப்பு வழிபாடு நடந்தது.

படிக்கட்டுகள் ஏறிய காளை மாடுகள்

கோபி பகுதியில் உள்ள முருகன் கோவில்களில் ஆடி கிருத்திகை வழிபாடு நேற்று நடைபெற்றது. அதன்படி கோபி பச்சைமலை சுப்பிரமணியசாமி கோவிலிலும் ஆடி கிருத்திகை விழா நடந்தது. இதையொட்டி கொங்கர்பாளையத்தை சேர்ந்த பெருமாள் சாமி என்ற விவசாயி நேற்று காலை 2 காளைமாடுகளுடன் கோவில் அடிவாரத்துக்கு வந்தார். பின்னர் அவர் 2 காளைமாடுகளுடன் 161 படிக்கட்டு்கள் வழியாக ஏறி கோவிலுக்கு சென்று முருகப்பெருமானை தரிசனம் செய்தார்.

மேலும் 2 காளைகளுக்கும் கோவிலில் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது. பின்னர் மாற்று வழியாக அவர் கோவிலில் இருந்து கீழே இறங்கி சென்றார். இதுகுறித்து அவர் கூறும்போது, 'ஆண்டுதோறும் நான் ஆடி கிருத்திகை அன்று வேண்டுதலுக்காக 2 காளை மாடுகளுடன் படிக்கட்டுகள் வழியாக ஏறி முருகன் கோவிலுக்கு சென்று தரிசனம் செய்து வருகிறேன். அதன்படி இந்த ஆண்டு ஆடி கிருத்திகையையொட்டி பச்சைமலை சுப்பிரமணியசாமி கோவிலுக்கு சென்று தரிசனம் செய்தேன்' என்றார்.

பவளமலை

இதேபோல் கோபி பவளமலை முத்துக்குமாரசாமி கோவிலில் காலை 6 மணிக்கு திருப்படி பூஜை நடைபெற்றது. அதைத்தொடர்ந்து காலை 9 மணி அளவில் சிறப்பு யாகம் நடந்தது. பின்னர் சாமிக்கு பல்வேறு வாசனை திரவியங்களால் அபிஷேகங்கள் செய்யப்பட்டன. பகல் 11 மணி அளவில் வள்ளி, தெய்வானை, சுப்பிரமணியருக்கு திருக்கல்யாண உற்சவம் நடந்தது.

அதன்பின்னர் சாமி அலங்காரம் செய்யப்பட்டு மகாதீபாராதனை காட்டப்பட்டது. இதையொட்டி பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. மேலும் கோபி அருகே உள்ள அருள்மலை முருகன் கோவில், மூலவாய்க்கால் முருகன் கோவில், கருங்கரடு முருகன் கோவில் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதியில் உள்ள முருகன் கோவில்களில் ஆடி கிருத்திகையையொட்டி சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

சிவகிரி

சிவகிரி வேலாயுதசாமி கோவிலில் ஆடி கிருத்திகையை முன்னிட்டு சாமிக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை செய்யப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். மதியம் 1 மணி அளவில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

ஊஞ்சலூர்

ஊஞ்சலூர் நாகேஸ்வரர் கோவிலில் உள்ள முருகனுக்கு சிறப்பு அர்ச்சனை செய்யப்பட்டது. இதேபோல் கொளாநல்லி பாம்பலங்கார சாமி கோவில் வளாகத்தில் உள்ள முருகன் சன்னிதி, பழனிக்கவுண்டன்பாளையத்தில் உள்ள பழனிக்குமாரசாமி மலைக்கோவிலில் உள்ள பழனிக்குமாரசாமிக்கும் நேற்று சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன.

இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

பால்குட ஊர்வலம்

அம்மாபேட்டை காவிரி கரையில் அமைந்துள்ள மீனாட்சி உடனமர் சொக்கநாதர் கோவில் வளாகத்தில் உள்ள வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணியர் சன்னதியில் ஆடி கிருத்திகை சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

இதையொட்டி பக்தர்கள் அரசு மரம் விநாயகர் கோவிலில் இருந்து பால்குடம் எடுத்து ஊர்வலமாக சுப்பிரமணியர் கோவிலுக்கு சென்றனர். அதன்பின்னர் சாமிக்கு பால் அபிஷேகம் நடைபெற்றது. இதையடுத்து சிறப்பு அலங்காரத்தில் சுப்பிரமணியர் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வந்திருந்தனர்.

சென்னிமலை

சென்னிமலை முருகன் கோவிலில் ஆடி கிருத்திகை முன்னிட்டு நேற்று காலை 5.45 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு முதலில் கோமாதா பூஜை நடைபெற்றது.

பின்னர் மூலவர் மற்றும் உற்சவருக்கு ஆடி கிருத்திகை சிறப்பு வழிபாடு நடைபெற்றது. அப்போது ராஜ அலங்காரத்தில் முருகப்பெருமான் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

அதனைத் தொடர்ந்து சாமி புறப்பாடு நடைபெற்றது. விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

கொடுமுடியில் உள்ள பிரசித்திபெற்ற மகுடேசுவரர் வீரநாராயணபெருமாள் கோவிலில் வள்ளி, தெய்வானையுடன் வீற்றிருக்கும் சுப்பிரமணியருக்கு தனி சன்னதி உள்ளது. இங்கு ஆடிக்கிருத்திகையையொட்டி நேற்று சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.

Tags:    

மேலும் செய்திகள்