மாவட்டத்தில்ரூ.312 கோடியில் சாலைப்பணிகள்
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 81.89 கிலோ மீட்டர் நீளத்திற்கு ரூ.312 கோடியில் 19 சாலைப்பணிகள் நடைபெற்று வருவதாக கலெக்டர் சரயு கூறினார்.
கலெக்டர் ஆய்வு
கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி ஊராட்சி ஒன்றியம், ஆவல்நத்தம் சாலையில் நெடுஞ்சாலைத்துறை சார்பில் ரூ.4 கோடியே 64 லட்சம் மதிப்பில் ஒரு வழி தடத்திலிருந்து இருவழி தடமாக அகலப்படுத்தி வலுப்படுத்துதல், 3 இடங்களில் தடுப்பு சுவர் கட்டுமான பணிகள் மற்றும் 5 சிறுபாலங்கள் அமைக்கப்படுள்ள பணிகளை கலெக்டர் சரயு நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அப்போது தார் சாலையின் தரத்தை பரிசோதனை செய்தார். தொடர்ந்து கலெக்டர் சரயு நிருபர்களிடம் கூறியதாவது:-
சாலைகள் பராமரிப்பு
கிருஷ்ணகிரி நெடுஞ்சாலைத்துறை கட்டுமானம் மற்றும் பராமரிப்பு கோட்டத்தின் கீழ் மாநில நெடுஞ்சாலைகள் 279.953 கி.மீ., மாவட்ட முக்கிய நெடுஞ்சாலைகள் 262.755 கி.மீ மற்றும் இதர மாவட்ட சாலைகள் 1190.431 கி.மீ சாலைகள் என மொத்தம் 1738.139 கி.மீ நீளமுள்ள சாலைகள் பராமரிக்கப்பட்டு வருகிறது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 2022-2023-ம் நிதியாண்டில் ஒருங்கிணைப்பட்ட சாலை உட்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டத்தின் கீழ், தொழில் நகரமான ஓசூர் மற்றும் ராயக்கோட்டை பகுதிகளில் மாநில நெடுஞ்சாலை 33.430 கி.மீ நீளம் ரூ.260 கோடியே 50 லட்சம் மதிப்பீட்டில் 5 பணிகள் நான்கு வழிச்சாலையாக மாற்றும் பணிகள்.
விரைந்து முடிக்க அறிவுரை
தேன்கனிக்கோட்டை, உத்தனப்பள்ளி, அஞ்செட்டி உள்ளிட்ட பகுதிகளில் 14.10 கி.மீ நீளமுள்ள 3-மாவட்ட சாலைகள் ரூ.17 கோடியே 80 லட்சம் மதிப்பீட்டில் இருவழிச்சாலையாக அகலப்படுத்தும் பணிகள், இதர மாவட்ட சாலைகளை மேம்படுத்தும் பொருட்டு கிருஷ்ணகிரி அணை சாலை பர்கூர் சிந்தகம்பள்ளி சாலை, பண்ணந்தூர், பந்தாரஹள்ளி, காரப்பட்டு, கல்லாவி, போச்சம்பள்ளி, கப்பல்வாடி, ஒரப்பம்,
செந்தாரப்பள்ளி மற்றும் மலை கிராமமான பெட்டமுகிலாளம், பஞ்சப்பள்ளி உள்ளிட்ட பகுதிகளில் ரூ.33 கோடியே 80 லட்சம் மதிப்பீட்டில் 11 சாலைப்பணிகள் என மொத்தம் 81.89 கி.மீ நீளத்திற்கு ரூ.312 கோடியே 10 லட்சம் மதிப்பீட்டில் 19 பணிகள் நடைபெற்று வருகிறது. சாலை பணிகளை விரைந்து முடித்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இவ்வாறு கலெக்டர் கூறினார்.
ஆய்வின் போது நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் சரவணன், உதவிக்கோட்ட பொறியாளர் ஜெய்குமார், உதவி கோட்ட பொறியாளர் (தரக்கட்டுப்பாடு) பத்மாவதி, உதவி பொறியாளர் ரியாஸ் முகமது மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.