தருவைகுளத்தில்படகுகள் நிறுத்துவதற்கு கூடுதல் இடவசதி செய்து தரப்படும்: அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன்

தருவைகுளத்தில் படகுகள் நிறுத்துவதற்கு கூடுதல் இடவசதி செய்து தரப்படும் என்று அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

Update: 2023-07-31 18:45 GMT

தருவைகுளத்தில் படகுகள் நிறுத்துவதற்கு கூடுதல் இடவசதி செய்து தரப்படும் என்று மீன்வளம், மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் கூறினார்.

இலவச சைக்கிள்

தூத்துக்குடி அருகே உள்ள தருவைகுளம் அரசு மேல்நிலைப்பள்ளியில் படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு இலவச சைக்கிள்கள் வழங்கும் நிகழ்ச்சி திங்கட்கிழமை காலையில் நடந்தது. நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் தலைமை தாங்கினார். மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ரெஜினி முன்னிலை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக மீன்வளம், மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டு மாணவ, மாணவிகளுக்கு இலவச சைக்கிள்களை வழங்கி பேசினார்.

அப்போது, தருவைகுளம் மீனவர்கள் ஆழ்கடல் மீன்பிடித்தல் உள்ளிட்ட அனைத்திலும் அவர்களுக்கு இணையானவர்கள் யாருமில்லை. தமிழக முதல்-அமைச்சர் தமிழ்நாட்டின் கல்வி வளர்ச்சிக்காக பட்ஜெட்டில் ரூ.35 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்து உள்ளார். அரசு பள்ளியில் படித்த மாணவர்கள் முன்னேற வேண்டும் என்பதற்காக புதுமைப்பெண் திட்டத்தில் மாதம் ரூ.1000 வழங்கும் திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை தந்து உள்ளார். இந்த பள்ளிக்கு கூடுதல் இடம் வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று அருகில் உள்ள 5 ஏக்கர் இடத்தை பள்ளிக்கு ஒதுக்குவதற்கு மாவட்ட நிர்வாகம் மூலம் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். அதுபோல பைபாஸ் சாலை அமைப்பதற்கும் தேவையான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உள்ளது.

இடவசதி

ஒவ்வொரு சட்டமன்ற தொகுதிக்கும் ஒரு விளையாட்டு மைதானம் அமைக்கப்படும் என்று முதல்-அமைச்சர் அறிவித்து உள்ளார். அதன்படி ஓட்டப்பிடாரம் தொகுதியில் தருவைகுளத்தில் விளையாட்டு மைதானம் அமைக்க அரசுக்கு கருத்துரு அனுப்பப்பட்டு உள்ளது. இந்த அரசு பள்ளியில் கூடுதல் கட்டிடம் கட்டுவதற்கு முதல்-அமைச்சர் ரூ.1 கோடியே 50 லட்சம் ஒதுக்கி உள்ளார். இங்கு உள்ள மீனவர்கள் தமிழ்நாடு சட்டமன்ற குழுவிடம் தருவைகுளத்தில் படகுகள் நிறுத்துவதற்காக கூடுதல் இடவசதி ஏற்படுத்தி தர வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்கள். மீன்வளம், மீனவர் நலத்துறை மூலம் விரைவில் நிதி ஒதுக்கீடு செய்து தருவைகுளத்தில் படகுகள் நிறுத்துவதற்கு கூடுதல் இடவசதி செய்து தரப்படும், என்று கூறினார்.

கலந்து கொண்டவர்கள்

நிகழ்ச்சியில் ஓட்டப்பிடாரம் தாசில்தார் சுரேஷ், மாவட்ட ஆவின் தலைவர் சுரேஷ்குமார், பள்ளி மேலாண்மைக்குழு தலைவர் கமலாவதி மற்றும் அலுவலர்கள், மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்