போடியில் கடந்த சில நாட்களாக கடுமையான வெயில் வாட்டி வதைத்து வந்தது. இந்நிலையில் வெயிலின் தாக்கத்தை தணிக்கும் வகையில் கடந்த 2 நாட்களாக மாலையில் மழை பெய்தது. இதனால் பொதுமக்கள் வெப்பத்தில் இருந்து தப்பித்தனர். இதையடுத்து நேற்று மீண்டும் போடியில் வெயில் கொளுத்தியது. இதற்கிடையே மாலை சுமார் அரை மணி நேரம் பலத்த மழை பெய்தது. பின்னர் விட்டு விட்டு வெயில் அடித்த நிலையில் நேற்று மாலை வானில் மேககூட்டங்கள் சூழ்ந்தன. அதன் பின்பு 3.30 மணிக்கு மழை பெய்ய தொடங்கியது. இந்த மழை சுமார் 1½ மணி நேரம் நீடித்தது. இதனால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவியது. கனமழை காரணமாக சாலையில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. அப்போது மழை நீருடன் சாக்கடை கழிவு நீரும் கலந்து சாலையில் ஓடியது. இதனால் சாலையில் பொதுமக்கள் நடமாட முடியாமல் அவதியடைந்தனர்.