ஆவின் நிறுவனத்தில் பால் திருடிய 4 பேர் கைது

நெல்லை ஆவின் நிறுவனத்தில் பால் திருடிய 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2023-03-10 20:19 GMT

நெல்லை ஆவின் நிறுவனத்தில் பால் திருடிய 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

திருட்டு

நெல்லை ரெட்டியார்பட்டியில் ஆவின் பால் நிறுவனம் அமைந்துள்ளது. இங்கு கால்நடை விவசாயிகள் மூலம் சேகரிக்கப்படும் பால் கொண்டு வரப்பட்டு, பாக்கெட்டுகளில் அடைத்து பொது மக்களுக்கு விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.

இவ்வாறு உள்ளே கொண்டு வரப்படும் பால் அளவு மற்றும் வெளியே கொண்டு செல்லப்படும் பால் அளவு ஆகியவை ஊழியர்களால் கண்காணிக்கப்படும். இருந்த போதிலும் பால் திருட்டு நடப்பதாக நிர்வாகத்துக்கு புகார் வந்துள்ளது.

இதையொட்டி நேற்று முன்தினம் இரவு அதிகாரிகள், நிறுவனத்தில் இருந்து பால் பாக்கெட்டுகளை ஏற்றிக்கொண்டு வெளியே புறப்பட்ட ஒரு வாகனத்தில் திடீர் சோதனை நடத்தினார்கள். அப்போது அதில் 200 லிட்டருக்கு மேல் பால் திருடிச் சென்றது கண்டுபிடிக்கப்பட்டது.

4 பேர் கைது

இதுதொடர்பாக ஆவின் நிர்வாகம் தரப்பில் பெருமாள்புரம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. தகவல் அறிந்ததும் நெல்லை மாநகர கிழக்கு பகுதி போலீஸ் துணை கமிஷனர் சீனிவாசன் தலைமையில் நேற்று போலீசார் ஆவின் நிறுவனத்துக்கு சென்று அதிரடி விசாரணையில் ஈடுபட்டனர்.

இதுதொடர்பாக பால் ஏற்றி சென்றவர் மற்றும் அந்த பணியில் ஈடுபட்டவர்கள் என மொத்தம் 4 பேரை போலீசார் விசாரணைக்கு போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச்சென்றனர். அவர்களிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி ரமேஷ்,ஷேக் மன்சூர், ஆசைதம்பி உள்ளிட்ட 4 பேரை கைது செய்தனர்.

இந்த சம்பவம் நெல்லையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பொது மேலாளர் விளக்கம்

இதுகுறித்து ஆவின் பொது மேலாளர் தியானேஷ் பாபு கூறியதாவது:-

நெல்லை மாநகராட்சி பகுதியில் பால் வினியோகம் செய்யும் வாகனம் 9-ந்தேதி இரவு திடீர் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டது. அப்போது அனுமதிக்கப்பட்ட அளவை விட 202 ¾ லிட்டர் பால் திருடி கொண்டு செல்வது கண்டுபிடிக்கப்பட்டது.

அதில் பசும்பால் 100½ லிட்டர், நிறை கொழுப்பு பால் 49½ லிட்டர், சமன்படுத்தப்பட்ட பால் 52¾ லிட்டர் என மொத்தம் 202¾ லிட்டர் பால் மற்றும் 1 லிட்டர் தயிர் ஆகியவை திருடியது கண்டுபிடிக்கப்பட்டது. இதுதொடர்பாக பெருமாள்புரம் போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. விசாரணைக்கு நிர்வாகம் தரப்பில் முழு ஒத்துழைப்பு வழங்கப்பட்டு வருகிறது.

மேலும் இதுபோல் நிகழ்வுகள் எதிர்காலத்தில் நடக்காத வகையில் நெல்லை ஒன்றிய ஆவின் நிர்வாகம், பல ஆக்க பூர்வமான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்