முதல்அமைச்சரின் காலை உணவு திட்டத்தில் மாணவர்களுக்கு தரமான, சத்தான உணவுகளை வழங்க வேண்டும் அதிகாரிகளுக்கு கலெக்டர் ஷ்ரவன் குமார் அறிவுறுத்தல்

முதல்-அமைச்சரின் காலை உணவு திட்டத்தில் மாணவர்களுக்கு தரமான, சத்தான உணவுகளை வழங்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு கலெக்டர் ஷ்ரவன் குமார் அறிவுறுத்தி உள்ளார்.

Update: 2022-09-07 16:13 GMT

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளிகளில் 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு முதல்-அமைச்சரின் காலை உணவு திட்டத்தை செயல்படுத்துவது குறித்த ஆய்வுக்கூட்டம் கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்றது. இதில் மாவட்ட கலெக்டர் ஷ்ரவன்குமார் தலைமை தாங்கி பேசியதாவது:-

கல்வராயன்மலை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட 15 அரசுப்பள்ளிகளில் 1 முதல் 5-ம் வகுப்பு வரை பயிலும் 984 மாணவர்களுக்கு முதற்கட்டமாக அனைத்து பள்ளி வேலை நாட்களிலும் முதல்-அமைச்சரின் காலை உணவு வழங்கும் திட்டம் தொடங்கப்பட உள்ளது. இத்திட்டத்தின்கீழ் திங்கட்கிழமை உப்புமா வகையிலும், செவ்வாய்க்கிழமை கிச்சடி வகையிலும், புதன்கிழமை பொங்கல் வகையிலும், வியாழக்கிழமை உப்புமா வகையிலும், வெள்ளிக்கிழமை கிச்சடியுடன் இனிப்பு ஆகியவை மாணவர்களுக்கு வழங்கப்பட உள்ளது.

சுகாதாரமான உணவு

இத்திட்டத்தை ஊராட்சி மன்ற தலைவர் தலைமையிலான மையக்குழுவில் தலைமையாசிரியர், பள்ளி மேலாண்மைக்குழு தலைவர், ஒரு பள்ளி மேலாண்மைக்குழு உறுப்பினர், ஊராட்சி அளவிலான கூட்டமைப்பின் தலைவர் மற்றும் மகளிர் சுய உதவிக்குழுக்கள் கொண்டு செயல்படுத்தப்பட உள்ளது.

தமிழக அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி மகளிர் சுய உதவிக்குழுவினர் மாணவர்களுக்கு சுகாதாரமான உணவுகளை தயாரித்து வழங்க வேண்டும். சமையற்கூடங்களை தூய்மையாக பராமரித்திட வேண்டும். இத்திட்டத்திற்கு தேவையான அனைத்து உதவிகளும் மாவட்ட நிர்வாகத்தின் மூலமாக மேற்கொள்ளப்படும். இச்சிறப்பு திட்டத்தை அனைவரும் பொறுப்புணர்வுடனும் ஈடுபாட்டுடனும் செயல்படுத்தி மாணவர்களுக்கு தரமான, சத்தான உணவுகளை வழங்கிட வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

கூட்டத்தில், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் மணி, தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்க திட்ட இயக்குநர் தேவநாதன, இணை பதிவாளர் கூட்டுறவு சங்கங்கள் யசோதாதேவி, மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் விஜயலட்சுமி, மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (சத்துணவு) சரவணபவ, உணவு பாதுகாப்பு அலுவலர் கதிரவன், பள்ளி தலைமையாசிரியர்கள், மகளிர் சுய உதவிக்குழுக்கள், பள்ளி மேலாண்மைக்குழு உறுப்பினர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்