முதியவர் அடித்துக் கொல்லப்பட்ட வழக்கில் மருமகனுக்கு போலீசார் வலைவீச்சு
முதியவர் அடித்துக் கொல்லப்பட்ட வழக்கில் மருமகனை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர்.
புதுக்கோட்டை வ.உ.சி நகர், சிவன் கோவில் பகுதியில் உள்ள மொட்டை கிணறு அருகே சந்தேகப்படும்படியாக ஆள் நடமாட்டம் இருப்பதாக புதுக்கோட்டை போலீசுக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அங்கு ஒரு லோடு ஆட்டோ நின்று கொண்டிருந்தது. கிணற்றின் அருகே சாக்கு முட்டையுடன் ஒருவர் நின்று கொண்டிருந்தாராம். போலீசை பார்த்தவுடன் அவர் தப்பி சென்று விட்டதாக கூறப்படுகிறது. உடனடியாக போலீசார் சம்பவ இடத்தில் சென்று அந்த மூட்டையை கைப்பற்றி சோதனை செய்தனர். அந்த மூட்டையில் ஒரு முதியவர் அடித்து கொலை செய்து மறைத்து வைக்கப்பட்டு இருப்பது தெரிய வந்தது. உடனடியாக போலீசார் அந்த உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
தொடர்ந்து புதுக்கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் வின்சென்ட் அன்பரசி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார். விசாரணையில், கொலை செய்யப்பட்டவர் சாயர்புரத்தை சேர்ந்த தாமஸ் மகன் சிம்சன் (வயது 75) என்பது தெரியவந்தது. இவரது மூத்த மருமகன் ஆறுமுகமங்கலத்தை சேர்ந்த ஜெயராமன் மகன் முருகன் என்பவருக்கும், சிம்சனுக்கும் இடையே சொத்து பிரச்சினை இருந்து வந்ததாக கூறப்படுகிறது. நேற்று முன்தினம் அவர்களுக்கு இடையே ஏற்பட்ட வாக்குவாதத்தில், முருகன், சிம்சனை அடித்து கொலை செய்து, தனது லோடு ஆட்டோவில் வைத்து உடலை கிணற்றில் வீசுவதற்காக கொண்டு சென்றதாகவும் கூறப்படுகிறது.
இதனை தொடர்ந்து இன்ஸ்பெக்டர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு உள்ளது. தனிப்படை போலீசார் முருகனை தீவிரமாக தேடி வருகின்றனர்.