வழிப்பறி, சாராயம் காய்ச்சிய வழக்கில் 2 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கரூர் பகுதியில் வழிப்பறி, சாராயம் காய்ச்சிய வழக்கில் 2 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்து உள்ளது.

Update: 2023-07-07 18:29 GMT

வழிப்பறி-சாராயம் காய்ச்சுதல்

திண்டுக்கல் மாவட்டம், கதிரையன்குளத்தை சேர்ந்தவர் ராஜசேகர் (வயது 38). இவர் கரூர், தாந்தோணிமலை, வெங்கமேடு, வேலாயுதம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் வழிப்பறி சம்பவங்களில் ஈடுபட்டு வந்தார். இந்நிலையில் கடந்த மே மாதம் 4-ந்தேதி தாந்தோணிமலை போலீசார் ராஜசேகரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.இதேபோல் கரூர் மாவட்டம், மேட்டு மகாதானபுரத்தை சேர்ந்தவர் சண்முகம் என்கிற பன்னி சண்முகம் (43). இவர் லாலாபேட்டை அருகே உள்ள ஓமாந்தூரில் உள்ள குண்டாறு வாய்க்கால் அருகில் உள்ள தோட்டத்தில் சாராயம் காய்ச்சுவதற்காக ஊறல் போட்டது தொடர்பாக, மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசார் கடந்த ஜூன் மாதம் 16-ந்தேதி சண்முகம் மீது வழக்கு பதிந்து, கைது செய்து சிறையில் அடைத்தனர்.

குண்டர் சட்டத்தில் கைது

இதையடுத்து ராஜசேகர், சண்முகம் ஆகியோரை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய கரூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுந்தரவதனம், மாவட்ட கலெக்டர் பிரபுசங்கருக்கு பரிந்துரை செய்தார். இதையடுத்து 2 பேரையும் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய கலெக்டர் பிரபுசங்கர் உத்தரவிட்டார். பின்னர் ராஜசேகர், சண்முகம் ஆகியோர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு, திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்