தொழில் அதிபர் வீட்டில் 30 பவுன் நகை, ரூ.3 லட்சம் திருட்டு

நாகர்கோவிலில் தொழில் அதிபர் வீட்டில் 30 பவுன் நகை மற்றும் ரூ.3 லட்சம் பணத்தை திருடி சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.

Update: 2022-12-05 20:23 GMT

நாகர்கோவில், 

நாகர்கோவிலில் தொழில் அதிபர் வீட்டில் 30 பவுன் நகை மற்றும் ரூ.3 லட்சம் பணத்தை திருடி சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.

தொழில் அதிபர்

நாகர்கோவிலில் மாவட்ட சிறைச்சாலை அருகே உள்ள அப்சர்வேட்டரி தெருவை சேர்ந்தவர் யூஜின்தாஸ் (வயது 70), தொழில் அதிபர். இவருடைய மனைவி கமலா. இவர்களுடைய மகள் பெர்ட்டி என்பவர் சென்னையில் டாக்டராக உள்ளார். இந்த நிலையில் யூஜின்தாசும், கமலாவும் கடந்த 2-ந் தேதி வீட்டை பூட்டிவிட்டு சென்னையில் உள்ள மகளை பார்பதற்காக சென்றனர்.

இந்த நிலையில் நேற்று மாலையில் யூஜின்தாசின் வீட்டின் முன்புற கதவு திறந்து கிடந்தது. இதைப் பார்த்த பக்கத்து வீட்டுக்காரர் யூஜின்தாஸ்தான் ஊரில் இருந்து வந்ததாக கருதி அங்கு சென்று பார்த்தார். அப்போது வீட்டின் முன்புற கதவின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது.

நகை- பணம் கொள்ளை

இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் யூஜின்தாசின் உறவினர்களுக்கு தகவல் தெரிவித்தார். தொடர்ந்து யூஜின்தாசின் உறவினர்கள் விரைந்து வந்து வீட்டுக்குள் சென்று பார்த்தனர். அப்போது வீட்டில் இருந்த பொருட்கள் ஆங்காங்கே சிதறிக்கிடந்தன. வீட்டில் பீரோ கதவு திறக்கப்பட்டு இருந்தது.

பின்னர் இதுபற்றி நேசமணிநகர் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் வீட்டில் ஆள் இல்லாததை நோட்டமிட்டு யாரோ மர்ம நபர்கள் யூஜின்தாஸ் வீட்டுக்குள் புகுந்து ரூ.3 லட்சம் மற்றும் 30 பவுன் நகை ஆகியவற்றை திருடி சென்றது தொியவந்தது.

ஆனால் யூஜின்தாஸ் இன்னும் ஊர் திரும்பாததால் நகை கூடுதலாக திருட்டு போய் இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. எனவே அவர் வந்த பிறகுதான் எவ்வளவு நகை திருட்டு போனது என்ற விவரம் தெரியவரும் என்று போலீசார் கூறினர்.

கண்காணிப்பு கேமரா

இதற்கிடையே கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு மர்ம நபர்களின் கைரேகை பதிவு செய்யப்பட்டது. மேலும் வீட்டின் அருகேயுள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளையும் போலீசார் கைப்பற்றி ஆய்வு செய்து மர்ம நபர்களை தேடி வருகிறார்கள். நாகர்கோவிலில் தொழில் அதிபர் வீட்டில் நகை மற்றும் பணம் திருடப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்