பர்கூர் மலைப்பகுதியில் பலாப்பழங்களை தேடி கிராமத்துக்குள் வரும் காட்டு யானைகள்

பர்கூர் மலைப்பகுதியில் பலாப்பழங்களை தேடி கிராமத்துக்குள் யானைகள் வருகின்றன.

Update: 2023-05-09 20:56 GMT

பர்கூர் மலைப்பகுதியில் இருந்து பலாப்பழங்களை தேடி கிராமங்களுக்குள் காட்டு யானைகள் புகுந்துவிடுகின்றன.

பலாப்பழ சீசன்

அந்தியூர் அருகே உள்ள பர்கூர் மலைப்பகுதியில் அதிக அளவில் பலா மரங்கள் உள்ளன. தற்போது பலாப்பழம் சீசன் என்பதால் வனப்பகுதியில் உள்ள மரங்களில் பலாப்பழம் பழுத்து காணப்படுகின்றன.

யானைகள் ருசித்து சாப்பிடும் உணவாக பலாப்பழம் உள்ளது. குறிப்பாக மலைக்கிராமங்கள் மற்றும் அதையொட்டி உள்ள வனப்பகுதிகளில் பலா மரங்கள் காணப்படுகின்றன. இதை தின்பதற்காக யானைகள் கிராமங்களுக்குள் வருகின்றன.

2 யானைகள்

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு துருசனாம்பாளையம் மலைக்கிராமத்துக்கு 2 காட்டு யானைகள் வந்து உள்ளன. பின்னர் அந்த கிராமத்தை சேர்ந்த விவசாயியான மாது என்பவரின் வீட்டின் அருகே உள்ள மரத்தில் பலாப்பழங்களை யானைகள் துதிக்கையால் பறித்து தின்ன தொடங்கின. யானையை கண்டதும் அந்த பகுதியை சேர்ந்த தெரு நாய்கள் குரைத்தன. நாய்கள் குரைக்கும் சத்தம் கேட்டு மாது மற்றும் அவருடைய உறவினர்கள் வீட்டை விட்டு வெளியே வந்தனர்.

அப்போது அங்கு 2 யானைகள், நின்றபடி பலாப்பழத்தை தின்று கொண்டிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். பலாப்பழங்களை முழுமையாக தின்ற பின்னர் 2 மணி நேரம் கழித்து யானைகள் அங்கிருந்து வனப்பகுதிக்குள் சென்றன.

மின் விளக்குகள்

இதுகுறித்து வனத்துறையினர் கூறுகையில், 'பலாப்பழங்களை மலைவாழ் மக்கள் தங்களுடைய வீடுகளில் சேமித்து வைக்க வேண்டாம். மேலும் வீடுகளின் முன்பு மின் விளக்குகளை எரியவிட வேண்டும். இரவு நேரங்களில் வீட்டை விட்டு வெளியே செல்லக்கூடாது,' என அறிவுறுத்தி உள்ளனர். 

Tags:    

மேலும் செய்திகள்