ஆண்டிப்பட்டியில் தலைவிரித்தாடும் ஆக்கிரமிப்பு: புறக்கணிக்கப்பட்ட புறவழிச்சாலை திட்டம் புத்துயிர் பெறுமா? தத்தளிக்கும் வாகனங்கள்

ஆண்டிப்பட்டியில் தொடரும் போக்குவரத்து நெரிசலால் புறவழிச்சாலை திட்டத்தை விரைவில் தொடங்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

Update: 2022-10-09 16:36 GMT

தேனி மாவட்டத்தில் உள்ள முக்கிய நகரங்களில் ஆண்டிப்பட்டியும் ஒன்று ஆகும். இந்த ஊர் வழியாக, மதுரை-கொச்சி தேசிய நெடுஞ்சாலை செல்கிறது. இந்த சாலையில் தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் பயணிக்கின்றன.

போக்குவரத்து நெரிசலில் தத்தளிப்பு

தேசிய நெடுஞ்சாலையின் அனைத்து பகுதிகளிலும் சாலை அகலமாக உள்ளது. ஆனால் ஆண்டிப்பட்டி நகருக்குள் மட்டும் சாலை குறுகி போய் விட்டது. இதற்கு முக்கிய காரணம் சாலையோர ஆக்கிரமிப்பு தான். தலைவிரித்தாடும் இந்த ஆக்கிரமிப்பை அகற்றுவது என்பது குதிரைக்கொம்பாகவே உள்ளது.

ஆண்டிப்பட்டி நகரில் போக்குவரத்து நெரிசல் என்பது தொடர்கதையாகி விட்டது. குறிப்பாக காலை, மாலை நேரங்களில் வாகனங்கள் ஆமை வேகத்தில் நகர்ந்து செல்வது அன்றாட காட்சியாகி விட்டது. முகூர்த்த நாட்களில் வாகன போக்குவரத்து முடங்கி விடுகிறது. தவிர்க்க முடியாத நெரிசலால் ஆண்டிப்பட்டி நகரம் தத்தளித்து கொண்டிருக்கிறது.

7 கிலோமீட்டர் தூரத்துக்கு புறவழிச்சாலை

ஆண்டிப்பட்டி நகரில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில், கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு புறவழிச்சாலை அமைக்க திட்டம் தீட்டப்பட்டது. அதன்படி மதுரை-கொச்சி சாலையில், டி.ராஜகோபாலன்பட்டி விலக்கு பகுதியில் இருந்து ரெங்கநாதபுரம் விலக்கு வரை சுமார் 7 கிலோமீட்டர் தூரம் புறவழிச்சாலை அமைக்க முடிவு செய்யப்பட்டது.

அதன்பிறகு புறவழிச்சாலை அமைக்கும் திட்டம் கிடப்பில் போடப்பட்டது. எனவே புறவழிச்சாலை திட்டத்தை விரைவுப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து 10 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் அந்த திட்டம் தூசு தட்டி எடுக்கப்பட்டது. அதன்படி கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு புறவழிச்சாலை அமைப்பதற்கான முதற்கட்ட பணி தொடங்கியது.

200 அடி அகலப்படுத்த முடிவு

தேசிய நெடுஞ்சாலைத்துறை மூலம் அளவீடு பணிகள் நடத்தப்பட்டு சாலை அமைக்கும் இடங்களில் கற்கள் ஊன்றப்பட்டன. அப்போது கட்டிடங்கள் இல்லாத பகுதியில் சுமார் 200 அடி அகலமும், கட்டிடங்கள் உள்ள பகுதியில் 100 அடி அகலமும் சாலை அமைக்க திட்டமிடப்பட்டது.

அரசு அனுமதி மற்றும் நிதி ஒதுக்கீடு செய்தவுடன் பணிகள் தொடங்கும் என்று நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். சாலை அமைப்பதற்கான அளவீடு பணிகள் முடிவடைந்து பல ஆண்டுகள் உருண்டோடி விட்டது. ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. புறவழிச்சாலை திட்டத்தை புறம் தள்ளியதற்கான காரணம் தெரியாமல் வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் புலம்பி தவிக்கின்றனர்.

புத்துயிர் பெறுமா?

நாளுக்குநாள் ஆண்டிப்பட்டி நகரில் போக்குவரத்து நெரிசல் அதிகரித்து கொண்டே இருக்கிறது. எனவே புறக்கணிக்கப்பட்ட புறவழிச்சாலை திட்டத்துக்கு புத்துயிர் அளிக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பில் பொதுமக்கள் உள்ளனர். இதுகுறித்து ஆண்டிப்பட்டியை சேர்ந்த சிலர் கூறியதாவது:-

கார் டிரைவர் வீரேந்திரன்: தினமும் காலை 8 மணி முதல் 10 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் 6 மணி வரையிலும் ஆண்டிப்பட்டி நகரில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. இதுதவிர பண்டிகை நாட்கள், சுபமுகூர்த்த நாட்களில் நாள் முழுவதும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனால் சுமார் 3 கிலோமீட்டர் தூரமுள்ள ஆண்டிப்பட்டி நகர் பகுதியை கடக்க வாகன ஓட்டிகளுக்கு ½ மணி நேரம் ஆகிவிடுகிறது.

தேனி மாவட்டத்தில் தேனி, வீரபாண்டி, சின்னமனூர், பாளையம் ஆகிய ஊர்களில் புறவழிச்சாலை அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் போக்குவரத்து அதிகம் உள்ள ஆண்டிப்பட்டியில் மட்டும் புறவழிச்சாலை அமைக்கப்படாததால் நாங்கள் பெரும் இன்னலுக்கு ஆளாகி வருகிறோம். எனவே சாலை அமைக்கும் பணியை விரைந்து தொடங்க வேண்டும்.

சாலையோர கடைகள்

வியாபாரி ராஜ்குமார்: ஆண்டிப்பட்டி நகரில் போக்குவரத்து நெரிசல் ஏற்படும் நேரங்களில் சாலையை கடக்க முடியாமல் மக்கள் தவித்து வருகின்றனர். போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதால் சாலையோர கடைக்காரர்களும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

பல ஆண்டுகளாக ஆண்டிப்பட்டிக்கு புறவழிச்சாலை அமைக்க நடவடிக்கை எடுப்பதாக அரசு கூறி வருகிறது. ஆனால் அதற்கான எந்த முன்னேற்பாடுகளும் இதுவரை நடக்கவில்லை. எனவே பொதுமக்கள் நலன்கருதி ஆண்டிப்பட்டி நகருக்கு புறவழிச்சாலை அமைக்க அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

நிரந்தர தீர்வு

கோவர்தன்: 3 கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட ஆண்டிப்பட்டி நகரத்தில் மிகவும் குறுகிய அளவிலேயே சாலை அமைக்கப்பட்டுள்ளது. அந்த சாலையை இருபுறமும் சிறு வியாபாரிகள் ஆக்கிரமித்துக் கொண்டதால், வாகனங்கள் செல்ல முடியாத நிலை உள்ளது. இதன் காரணமாக ஆண்டிப்பட்டி நகரில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. இதனால் பொதுமக்கள் அவதியடைந்து வருகின்றனர்.

ஆண்டிப்பட்டி நகரில் புறவழிச்சாலை அமைக்கும் திட்டத்திற்கான பணிகள் கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெற்று வருகிறது. ஆனால் தற்போது வரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. ஆண்டிப்பட்டி மக்கள் தினம் தினம் சந்திக்கும் இந்த பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண புறவழிச் சாலை அமைக்க வேண்டும். அதனை உடனடியாக செயல்படுத்த அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Tags:    

மேலும் செய்திகள்