ஆண்டிப்பட்டியில் சேதமடைந்த மின்வாரிய அலுவலகம்: இடிந்து விழும் என்ற அச்சத்துடன் பணியாற்றும் ஊழியர்கள்

ஆண்டிப்பட்டியில் மின்வாரிய அலுவலகம் சேதமடைந்தது.

Update: 2022-10-09 16:19 GMT

ஆண்டிப்பட்டி நகர் மற்றும் சுற்றுவட்டார கிராம பகுதிகளுக்கு ஆண்டிப்பட்டியில் உள்ள மின் நிலையத்தில் இருந்து மின்சாரம் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. 200-க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு இங்கிருந்து மின்சாரம் வழங்கப்பட்டு வருவதால் இந்த மின் நிலைய வளாகத்தில் 3 உதவி செயற்பொறியாளர்கள் அலுவலகம் உள்ளிட்ட இதர அலுவலகத்திற்கான கட்டிடங்கள் உள்ளன. இதில் கிழக்கு பகுதியில் உள்ள உதவி செயற்பொறியாளர் அலுவலக கட்டிடம் கட்டப்பட்டு 30 ஆண்டுகளை கடந்து விட்டது. இதனால் கட்டிடம் தற்போது முற்றிலும் சேதம் அடைந்து இடிந்து விழும் நிலையில் காணப்படுகிறது.

கட்டிடத்தின் மேற்கூரை பெயர்ந்து, கம்பிகள் வெளியே தெரியும் படியும், பல இடங்களில் பெரிய அளவிலான விரிசல்களுடன் அபாயகரமாக காட்சியளிக்கிறது. மேலும் ஜன்னல்கள் அனைத்தும் உடைந்து உள்ளது. சேதமடைந்த இந்த கட்டிடத்தின் மேற்கூரை எந்த நேரத்திலும் இடிந்து விழலாம் என்ற அச்சத்துடனே அலுவலர்கள், பணியாளர்கள் வேலை செய்து வருகின்றனர். மழைக்காலங்களில் அலுவலகத்திற்குள் தண்ணீர் தேங்குவதால் ஆவணங்களை பாதுகாக்க முடியாமல் அலுவலர்கள் திணறி வருகின்றனர். எனவே சேதமடைந்த கட்டிடத்தை இடித்துவிட்டு புதிய கட்டிடம் கட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்