ஆண்டிப்பட்டி பகுதியில்செண்டு மல்லி பூக்கள் விளைச்சல் அமோகம்:விலை வீழ்ச்சியால் சாலையில் கொட்டி செல்லும் விவசாயிகள்

ஆண்டிப்பட்டி பகுதியில் செண்டு மல்லி பூக்கள் அமோக விளைச்சல் அடைந்துள்ளது. விலை வீழ்ச்சியால் பூக்களை விவசாயிகள் சாலையில் கொட்டி செல்கின்றனர்.

Update: 2023-03-14 18:45 GMT

செண்டு மல்லி அமோக விளைச்சல்

ஆண்டிப்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான கன்னியபிள்ளைப்பட்டி, ராஜதானி, கொத்தபட்டி, சித்தார்பட்டி, தெப்பம்பட்டி உள்ளிட்ட சுற்றுவட்டார கிராமங்களில் அதிகளவில் செண்டுமல்லி சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இங்கு விளையும் பூக்களை ஆண்டிப்பட்டி பூமார்க்கெட்டில் ஏல முறையில் விவசாயிகள் விற்பனை செய்து வருகின்றனர். பூக்களின் தேவையை பொறுத்து ஏலம் நடத்தி விலை நிர்ணயம் செய்யப்பட்டு வருகிறது.

இந்நிலையில் செண்டுமல்லி பூக்கள் அமோக விளைச்சல் அடைந்துள்ளது. இதனால் கடந்த சில நாட்களாக ஆண்டிப்பட்டி பூமார்க்கெட்டிற்கு வரத்து அதிகரித்து காணப்படுகிறது. கடந்த வாரம் வரை ஆண்டிப்பட்டி பூமார்க்கெட்டிற்கு ஒரு நாளைக்கு 200 கிலோ அளவில் செண்டுமல்லி பூக்கள் விற்பனைக்கு வந்தது. தற்போது 2 டன் அளவிற்கு பூக்கள் வரத்தாகிறது.

விலை வீழ்ச்சி

இதன்காரணமாக செண்டுமல்லி பூக்களின் விலை வீழ்ச்சி அடைந்துள்ளது. கடந்த வாரம் ஒரு கிலோ செண்டு மல்லி பூ ரூ.30 ரூபாய் வரை விற்பனையானது. இந்நிலையில், தற்போது ரூ.10-க் கும் குறைவாகவே விற்கப்படுகிறது. இந்த விலை பூக்கள் பறிக்கும் செலவிற்கு கூட போதுமானதாக இல்லை என்று விவசாயிகள் கூறுகின்றனர். இதனால் பூக்களை பறித்து சந்தைக்கு கொண்டு வந்த விவசாயிகள், போதுமான விலை கிடைக்காததால் சாலையிலேயே கொட்டிவிட்டு செல்கின்றனர்.

மேலும் சில விவசாயிகள் பூக்கள் மூட்டைகளை குப்பை வண்டியில் வீசிவிட்டு செல்கின்றனர். எனவே அதிகமாக பூக்கள் விலையும் ஆண்டிப்பட்டி பகுதியில் விவசாயிகளுக்கு நிலையான வருமானம் கிடைக்கும் வகையில் வாசனைதிரவிய நிறுவனம் தொடங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்