தஞ்சையில், விவசாயிகள் கரும்புகளை கையில் ஏந்தியபடி ஆர்ப்பாட்டம்
தஞ்சையில், விவசாயிகள் கரும்புகளை கையில் ஏந்தியபடி ஆர்ப்பாட்டம்
கரும்பு டன்னுக்கு ரூ.5 ஆயிரம் வழங்கக்கோரி தஞ்சையில் விவசாயிகள் கையில் கம்புகளை ஏந்தியபடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டம்
தஞ்சை தலைமை தபால் நிலையம் முன்பாக தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்துக்கு, தமிழ்நாடு கரும்பு விவசாயிகளின் அறிஞர் அண்ணா சர்க்கரை ஆலை பிரிவுத் தலைவர் கந்தவேல் தலைமை தாங்கினார். தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்க மாநில செயலாளர் நாராயணசாமி, தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவர் செந்தில்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில பொதுச்செயலாளர் சாமி.நடராஜன் கலந்து கொண்டு பேசினார். ஆர்ப்பாட்டத்தில், பெட்ரோல், டீசல், சமையல் எண்ணெய், உரங்களின் விலைகள் இருமடங்காக உயர்ந்துள்ளது. கரும்பு உற்பத்திக்கான செலவு ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது. கரும்பு வெட்டுக் கூலியும் உயர்ந்துள்ளது. ஆனால் கரும்புக்கான கொள்முதல் விலை மட்டும் உயரவில்லை,
கையில் கரும்புகளுடன்...
எனவே கரும்பு விலையை டன் ஒன்றுக்கு ரூ.5 ஆயிரமாக உயர்த்தி வழங்க வேண்டும். கூட்டுறவு மற்றும் பொதுத்துறை சர்க்கரை ஆலைகளின் எதிர்காலத்தை கேள்வி குறியாக்கும் சர்க்கரை விற்பனையில் உள்ள கோட்டா முறையை கைவிட வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன. ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற கரும்பு விவசாயிகள் கையில் கரும்புகளை ஏந்தியபடி கலந்துகொண்டனர்.