தமிழ்நாட்டில்சிறுபான்மை மக்கள் தி.மு.க.வுக்குஆதரவாக இருக்க வேண்டும்: அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன்
தமிழ்நாட்டில் சிறுபான்மை மக்கள் தி.மு.க.வுக்கு ஆதரவாக இருக்க வேண்டும் என்று அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்,
ஆறுமுகநேரி:
தமிழ்நாட்டில் சிறுபான்மை மக்கள் தி.மு.க.வுக்கு ஆதரவாக இருக்க வேண்டும் என்று அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் கேட்டுக் கொண்டார்.
சாதனை விளக்க பொதுக்கூட்டம்
காயல்பட்டினம் நகர தி.மு.க. சார்பில் தி.மு.க. அரசின் 2 ஆண்டுகால சாதனை விளக்க பொதுக்கூட்டம் காயல்பட்டினம் வள்ளல் சீதக்காதி திடலில் நடைபெற்றது.
கூட்டத்திற்கு தூத்துக்குடி தெற்கு மாவட்ட துணை செயலாளர் எஸ்.ஐ. அப்துல் காதர் தலைமை தாங்கினார். நகர செயலாளரும் காயப்பட்டினம் நகரசபை தலைவருமான கே. ஏ. எஸ்.முத்து முகமது, நகர அவைத் தலைவர் முகமது மைதீன், தலைமை பொதுக்குழு உறுப்பினர்கள் முகமது அலி ஜின்னா, சாகுல் ஹமீது, ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
அமைச்சர் பேச்சு
கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக தமிழ்நாடு மீன்வளம் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ராதா கிருஷ்ணன் கலந்து கொண்டு பேசினார். நிகழ்ச்சியில் மாநில வர்த்தக அணி இணை செயலாளர் எஸ். ஆர். எஸ்.உமரிசங்கர், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ராமஜெயம், வழக்கறிஞர் பிரபாகரன், தலைமை கழக பேச்சாளர் செந்தூர் பாலகிருஷ்ணன் மற்றும் பலர் பேசினா்.
கூட்டத்தில் அமைச்சர் பேசுகையில், தமிழ்நாட்டில் மக்களை தேடி மருத்துவம், பள்ளியில் காலை சிற்றுண்டி உணவு வழங்குவது, விவசாயிகளுக்கு இலவசமின்சாரம் என பல்வேறு திட்டங்களை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் செயல்படுத்தி வருகிறார்.
அதேபோல் தேர்தல் வாக்குறுதியான குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டம் வருகிற செப். 15-ந் தேதிமுதல் தொடங்கப்பட உள்ளது. இப்படி தி.மு.க. தேர்தல் அறிக்கையில் கூறிய வாக்குறுதிகளில் 85 சதவீதம் நிறைவேற்றப்பட்டுள்ளது. மற்ற வாக்குறுதிகளையும் விரைவில் நிறைவேற்ற முதல்-அமைச்சர் நடவடிக்கை எடுத்து வருகிறார். காயல்பட்டினத்திற்கு பல்வேறு நல திட்டங்கள் தி.மு.க. ஆட்சியில் செயல்படுத்தப்பட்டு உள்ளது. தேவையான சாலை வசதி செய்து தரப்பட்டுள்ளது. அதுபோல் பல்வேறு அரசு திட்டங்கள் இப்பகுதி மக்களுக்கு செயல்படுத்தப்பட்டு வருகிறது. சிறுபான்மை மக்களுக்கு தி.மு.க. எப்போதும் பாதுகாப்பு கொடுத்து வருகிறது. எனவே சிறுபான்மை மக்கள் எப்போதும் தி.மு.க.வுக்கு ஆதரவாக இருக்க வேண்டும்' என்று கூறினார்.
கலந்து கொண்டவர்கள்
கூட்டத்தில் ஆறுமுகநேரி நகர பஞ்சாயத்து துணைத்தலைவர் கல்யாண சுந்தரம், காயல்பட்டினம் நகர சபை துணைத் தலைவர் சுல்தான் லெப்பை, மாவட்ட சிறுபான்மை பிரிவு அமைப்பாளர் ஜலீல், தலைமை பொதுக்குழு உறுப்பினர் செந்தில், நகர துணை செயலாளர்கள் கதிரவன், முகமது நெளபல் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.