தகட்டூரில், உறவினர்கள் சாலைமறியல்

தகட்டூரில், உறவினர்கள் சாலைமறியல்

Update: 2023-09-01 18:45 GMT

அடையாளம் தெரியாத வாகனம் மோதி மாணவன் இறந்தான். இதில் தொடர்புடைவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி தகட்டூரில் உறவினர்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர். இதனால் 7 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

மாணவன் பலி

நாகைமாவட்டம் வாய்மேட்டை அடுத்த பஞ்சநதிக்குளம் மேற்கு பகுதியை சேர்ந்தவர் அருள்செல்வன். இவரது மகன் தர்ஷன் (வயது12). இவன் தகட்டூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வந்தான். நேற்று முன்தினம் மாலை பள்ளி முடிந்து தகட்டூர் சமாதியடி பஸ் நிறுத்தத்தில் இறங்கி சாலையை கடக்கும் போது எதிர்பாராதவிதமாக அடையாளம் தெரியாத வாகனம் அவன் மீது மோதியது. இதில் தர்ஷன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தான். இதுகுறித்த புகாரின் பேரில் வாய்மேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து தர்ஷன் உடலை கைப்பற்றி திருத்துறைப்பூண்டி அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சாலைமறியல்

மாணவனை மோதிய அடையாளம் தெரியாத வாகனத்தை கண்டுபிடிக்கக்கோரியும், வாகனத்தை ஓட்டிய டிரைவரை கைது செய்யாததை கண்டித்தும் நேற்று தகட்டூர் சமாதியடி பஸ் நிறுத்தத்தில் தர்ஷனின் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு வந்த வேதாரண்யம் துணை போலீஸ் சூப்பிரண்டு சுபாஷ் சந்திரபோஸ், தாசில்தார் ஜெயசீலன், வாய்மேடு போலீஸ் இன்ஸ்பெக்டர் கன்னிகா ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில் உரிய நடவடிக்கை எடுப்பதாக அவர்கள் உறுதி அளித்தனர். இதையடுத்து சாலை மறியல் போராட்டம் கைவிடப்பட்டது. இந்த சாலை மறியல் போராட்டத்தால் வேதாரண்யம்- திருத்துறைப்பூண்டி சாலையில் 7 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. 

Tags:    

மேலும் செய்திகள்