தூத்துக்குடி சாமுவேல்புரம் பகுதியில்ெசல்போன் கோபுரம் அமைக்கும் பணியை தடுக்க கோரிக்கை

தூத்துக்குடி சாமுவேல்புரம் பகுதியில் செல்போன் கோபுரம் அமைக்கும் பணியை தடுத்து நிறுத்த வேண்டும் என்று பெண்கள் கலெக்டர் அலுலகத்தில் கோரிக்கை மனு கொடுத்தனர்.

Update: 2023-03-13 18:45 GMT

தூத்துக்குடி சாமுவேல்புரம் பகுதியில் செல்போன் கோபுரம் அமைக்கும் பணியை தடுத்து நிறுத்த வேண்டும் என்று பெண்கள் கலெக்டர் அலுலகத்தில் கோரிக்கை மனு கொடுத்தனர்.

கடன் தள்ளுபடி

கோவில்பட்டி அருகே உள்ள முடுக்கு மீண்டான்பட்டி மற்றும் நாலாட்டின் புதூரை சேர்ந்த மகளிர் சுய உதவிக்குழுவினர் கலெக்டர் அலுவலகத்தில் புகார் மனு கொடுத்தனர். அந்த மனுவில், நாங்கள் கூட்டுறவு வங்கி மூலம் கடன் தொகை பெற்று உள்ளோம். கொரோனா காலத்தில் உழைப்பு ஏதும் இல்லாததால் கடன் தொகையை செலுத்த முடியவில்லை. தற்போது வங்கியில் இருந்து கடன் தொகையை செலுத்த வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர். தமிழக முதல்-அமைச்சர் மகளிர் சுய உதவிக்குழுவினரின் கடன் தொகையை தள்ளுபடி செய்ய உத்தரவிட்டு உள்ளார். இதனால் பல குழுக்களின் கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டு உள்ளன. ஆனால் எங்கள் கடன் தொகை தள்ளுபடி செய்யப்படவில்லை. தொடர்ந்து வங்கியில் இருந்து எங்களை தொந்தரவு செய்து வருகின்றனர். ஆகையால் எங்கள் கடன் தொகையை தள்ளுபடி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி உள்ளனர்.

வேலைவாய்ப்பு

தூத்துக்குடி மாவட்டம் வேம்பார் அருகே உள்ள பெரியசாமிபுரத்தை சேர்ந்த மரியபுஷ்பம் என்ற பெண் தனது 2 குழந்தைகள், ஊர் பங்குத்தந்தை மார்ட்டின் ஆகியோருடன் வந்து கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தார். அந்த மனுவில், எனது கணவர் எழில் லாரன்ஸ் மீன்பிடித் தொழில் செய்து வந்தார். கடந்த ஆகஸ்ட் மாதம் 24-ம் தேதி மீன்பிடித் தொழில் செய்த போது கடலில் தவறி விழுந்து மாயமாகிவிட்டார். கடந்த 7 மாதங்களாக தேடியும் எந்த பலனும் இல்லை. இனிமேலும் அவர் திரும்பி வருவார் என்ற நம்பிக்கை இல்லை. இரண்டு குழந்தைகளை வைத்து கொண்டு எந்த வருமானமும் இல்லாமல் மிகவும் கஷ்டப்படுகிறேன். ஆகையால் எனக்கு வேலை வழங்கினால் குழந்தைகளை காப்பாற்ற வசதியாக இருக்கும். இதற்கு மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி உள்ளார்.

டி.வியுடன்...

இந்து தேசிய கட்சி மாவட்ட தலைவர் கே.ஜே.சிங் என்பவர் எல்.இ.டி டி.வியுடன் கலெக்டர் அலுவலகத்துக்கு வந்து மனு கொடுத்தார். அந்த மனுவில், டி.வி உள்ளிட்ட வீட்டு உபயோக பொருட்கள் வாங்க பூஜ்ஜிய வட்டியில் கடனுதவி வழங்கும் தனியார் நிதி நிறுவனங்கள் பின்னர், காலதாமத வட்டி, அபராத வட்டி என மக்களை ஏமாற்றி வட்டி வசூலிக்கின்றன. இதனால் மக்கள் பாதிக்கப்படுகின்றனர். எனவே, இவ்வாறு கடனுதவி வழங்கும் தனியார் நிதி நிறுவனங்களின் அதிகாரத்தை வரைமுறைப்படுத்த வேண்டும் என்று கூறி உள்ளார்.

காங்கிரஸ் முன்னாள் மாநில பொதுக்குழு உறுப்பினர் மச்சேந்திரன் அளித்த மனுவில், வாகைகுளம் விமான நிலையம் விரிவாக்கத்துக்காக முடிவைத்தானேந்தல், கட்டாலங்குளம், சேர்வைக்காரன்மடம், குமாரகிரி ஆகிய ஊராட்சிகளில் நிலம் கையகப்படுத்தப்பட்டு உள்ளது. விமான நிலைய விரிவாக்கத்துக்கு நிலம் கொடுத்த உரிமையாளர்களின் குடும்பங்களில் ஒருவருக்கு அரசு வேலை கிடைக்க, அரசுக்கு மாவட்ட நிர்வாகம் பரிந்துரை செய்ய வேண்டும் என்று கூறி உள்ளார்.

தூத்துக்குடி சாமுவேல்புரம் வடக்கு பகுதியை சேர்ந்த மக்கள் கலெக்டர் அலுவலகத்தில் கொடுத்த மனுவில், எங்கள் பகுதியில் 5ஜி செல்போன் கோபுரம் அமைக்கும் பணிகள் நடந்து வருகின்றன. குடியிருப்புகளுக்கு மத்தியில் செல்போன் கோபுரம் அமைப்பதால் பல்வேறு குழந்தைகள், பெண்கள், கர்ப்பிணி பெண்களுக்கு கதிர்வீச்சு காரணமாக பாதிப்புகள் ஏற்படும் அபாயம் உள்ளது. ஆகையால் குடியிருப்புகளுக்கு நடுவே அமைக்கப்படும் செல்போன் கோபுரம் பணியை நிறுத்த வேண்டும் என்று கூறி உள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்