திட்டக்குடியில் பழைய இரும்பு வியாபாரி வீட்டில் ரூ.4½ லட்சம் நகை-பணம் கொள்ளை மர்மநபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு

திட்டக்குடியில் பழைய இரும்பு வியாபாரி வீட்டில் ரூ.4½ லட்சம் மதிப்புள்ள நகை-பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Update: 2022-10-30 18:45 GMT

ராமநத்தம், 

திட்டக்குடி தெற்கு தெருவை சேர்ந்தவர் நீலமேகம்(வயது 58). இவர் திட்டக்குடி வெள்ளாறு ஓரம் பழைய இரும்பு கடை வைத்து நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் இரவு நீலமேகத்தின் மனைவி ஜோதி, தனது வீட்டை பூட்டி விட்டு கடைக்கு சென்றார். பின்னர் இரவு 9 மணியளவில் கடையை பூட்டிவிட்டு நீலமேகமும், ஜோதியும் வீட்டிற்கு வந்தனர்.

அப்போது வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு கிடந்தது. இதைபார்த்து அதிர்ச்சியடைந்த அவர்கள் உள்ளே சென்று பார்த்தபோது, பீரோ உடைக்கப்பட்டு கிடந்தது. உடனே பீரோவை சோதனை செய்து பார்த்தபோது, அதில் வைத்திருந்த 13 பவுன் நகைகள் மற்றும் ரூ.70 ஆயிரத்தை காணவில்லை.

வலைவீச்சு

ஜோதி வீட்டை பூட்டி விட்டு சென்றதை நோட்டமிட்ட மர்மநபர்கள் கதவை உடைத்து உள்ளே புகுந்து ரூ.4½ லட்சம் மதிப்புள்ள நகை-பணத்தை கொள்ளையடித்து சென்றிருப்பது தெரியவந்தது. இதுகுறித்த தகவல் அறிந்த திட்டக்குடி போலீசார், சம்பவ இடத்துக்கு வந்து கொள்ளை நடந்த வீட்டை பார்வையிட்டு விசாரணை நடத்தினர். மேலும் இதுகுறித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து நகை-பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்