பெரியகுளத்தில்தொழிலாளி வீட்டில் தீ விபத்து

பெரியகுளம் தென்கரையில் தொழிலாளி வீட்டில் தீ விபத்து ஏற்பட்டது.

Update: 2023-07-28 18:45 GMT

பெரியகுளம் தென்கரை இடுக்கடி லாட் தெருவை சேர்ந்தவர் நல்லமணி. கூலித்தொழிலாளி. நேற்று முன்தினம் இரவு இவரது வீட்டில் திடீரென தீப்பற்றி எரிந்தது. இதைக்கண்ட நல்லமணி மற்றும் அவரது குடும்பத்தினர் உடனடியாக வீட்டை விட்டு வெளியேறினர். பின்னர் அவர்கள் தண்ணீரை ஊற்றி தீயை அணைக்க முயன்றனர். அவர்களுடன் சேர்ந்து பக்கத்து வீட்டை சேர்ந்தவர்களும் மாடியில் இருந்து தண்ணீரை ஊற்றி தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். ஆனால் தீ மள,மளவென பற்றி எரிந்ததால் அவர்கள் அணைக்க முடியவில்லை.

இதையடுத்து பெரியகுளம் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதற்கிடையே தீ விபத்து குறித்து தகவல் அறிந்ததும் மின்வாரிய ஊழியர்கள் மின் வினியோகத்தை துண்டித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள் பொதுமக்களுடன் இணைந்து தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர். ஆனால் வீட்டில் இருந்த பொருட்கள் அனைத்தும் எரிந்து நாசமாகின. இந்த சம்பவம் தொடர்பாக தென்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்