திட்டச்சாலையை பயன்பாட்டுக்கு கொண்டு வரக்கோரிநகராட்சி அலுவலகத்தில் குழந்தைகளுடன் குடியேற முயற்சி:32 பேர் கைது
திட்டச்சாலையை பயன்பாட்டுக்கு கொண்டு வரக்கோரி, தேனி அல்லிநகரம் நகராட்சி அலுவலகத்தில் குழந்தைகளுடன் குடியேற முயன்ற 32 பேரை போலீசார் கைது செய்தனர்.
தேனி அல்லிநகரம் வள்ளிநகர் பகுதியில் வசிக்கும் 60-க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு பாதை வசதி ஏற்படுத்தும் வகையில் திட்டச்சாலையை பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும். திட்டச்சாலையில் வசிக்கும் மக்களுக்கு மாற்று இடம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில், தேனி அல்லிநகரம் நகராட்சி அலுவலகத்தில் குடியேறும் போராட்டம் அறிவிக்கப்பட்டது.
அதன்படி, இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் தாலுகா செயலாளர் அரசகுமார் தலைமையில் நிர்வாகிகள் மற்றும் வள்ளிநகர் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் நகராட்சி அலுவலகத்துக்கு நேற்று வந்தனர். அவர்களில் சிலர் தங்களின் குழந்தைகளையும் அழைத்து வந்தனர். நகராட்சி அலுவலக வளாகத்தில் அமர்ந்து அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் அவர்கள் போராட்டத்தை கைவிட மறுத்ததால் போராட்டத்தில் ஈடுபட்ட 32 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்கள் தேனியில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் அடைக்கப்பட்டனர். மாலையில் அவர்கள் விடுவிக்கப்பட்டனர்.