நொய்யல் பகுதியில் வரத்து அதிகரிப்பால் பூக்களின் விலை கடும் வீழ்ச்சி

நொய்யல் பகுதியில் வரத்து அதிகரிப்பால் பூக்களின் விலை கடும் வீழ்ச்சி அடைந்துள்ளது. ஒரு கிலோ குண்டு மல்லி ரூ.350-க்கு விற்பனையானது.

Update: 2022-07-01 19:28 GMT

பூக்கள் விற்பனை

கரூர் மாவட்டம் நொய்யல், மரவாபாளையம், குளத்துபாளையம், ஓலப்பாளையம், ஒரம்புப்பாளையம், நல்லிக்கோவில், கொங்குநகர், மூலிமங்கலம், பேச்சிப்பாறை, நடையனூர், கவுண்டன்புதூர், செட்டி தோட்டம்உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் குண்டு மல்லி, முல்லை, சம்பங்கி, அரளி, செவ்வந்தி, கனகாம்பரம், ரோஜா உள்ளிட்ட பல்வேறு வகையான பூக்கள் பயிர் செய்யப்பட்டுள்ளது.

ஏலம்

இங்குவிளையும் பூக்களை விவசாயிகள் உள்ளுர் பகுதிகளுக்கு வரும் வியாபாரிகளுக்கும், பரமத்தி வேலூரில் செயல்பட்டுவரும் 2 பூக்கள் ஏல மார்க்கெட்டிற்கும் கொண்டு சென்று விற்பனை செய்து வருகின்றனர். மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த வியாபாரிகள் பூக்களை ஏலம் எடுக்க வருகின்றனர்.ஏலம் எடுத்த உதிரிப் பூக்களை பல்வேறு ரகமான மாலைகளாகவும், தோரணங்களாலும் கட்டி விற்பனை செய்து வருகின்றனர். சில வியாபாரிகள் உதிரிப்பூக்களைபிளாஸ்டிக் கவரில் போட்டு உள்ளுர் பகுதிகளுக்கு கொண்டு சென்று விற்பனை செய்து வருகின்றனர்.

கடும் வீழ்ச்சி

கடந்த வாரம் நடைபெற்ற ஏலத்தில் ஒரு கிலோ குண்டுமல்லி ரூ.850-க்கும், சம்பங்கி கிலோ ரூ.120- க்கும், அரளி கிலோ ரூ.130- க்கும், ரோஜா கிலோ ரூ.200- க்கும், முல்லைப் பூ ரூ.650- க்கும், செவ்வந்திப்பூ ரூ.280-க்கும், கனகாம்பரம் ரூ.600-க்கும் விற்பனையானது.நேற்று நடைபெற்ற ஏல‌த்தில் குண்டு மல்லி கிலோ ரூ.350-க்கும், சம்பங்கி கிலோ ரூ.50- க்கும், அரளி கிலோ ரூ.80- க்கும், ரோஜா கிலோ ரூ.150- முல்லைப் பூ கிலோ ரூ.300-க்கும், செவ்வந்திப்பூ ரூ.180- க்கும், கனகாம்பரம் ரூ.300-க்கும் விற்பனையானது. கோவில் கும்பாபிஷேகம், திருமண நிகழ்வுகள் இல்லாததாலும், பூக்களின் உற்பத்தி அதிகரித்துள்ளதால் பூக்கள் விலை வீழ்ச்சி அடைந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்