நீலகிரி மாவட்டத்தில் பாறு கழுகுகள் பாதுகாப்பு மண்டலம் அமைக்கப்படுமா?-சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் எதிர்பார்ப்பு

நீலகிரி மாவட்டத்தில் பாறு கழுகுகள் பாதுகாப்பு மண்டலம் அமைக்கப்படுமா? என்று சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் எதிர்பார்த்து உள்ளனர்.

Update: 2023-04-11 18:45 GMT

இறந்த உயிரினங்களின் உடல் பாகங்களை தின்று நோய் பரவலை தடுக்கும் வல்லமை மிக்கது, பாறு கழுகுகள் என்று அழைக்கப்படும் பிணந்தின்னி கழுகுகள். இவை தமிழகத்தின் நீலகிரி மாவட்டத்திலும், கேரளாவின் வயநாட்டிலும், கர்நாடகாவின் வடக்கு பகுதியிலும் மட்டும் காணப்படுகின்றன.

பாறு கழுகுகள்

கடந்த காலங்களில் காகம், குருவிகளுக்கு இணையாக இருந்த பாறு கழுகுகளின் எண்ணிக்கையானது பல்வேறு காரணங்களால் அடியோடு குறைந்து வருகிறது. இதை தடுக்க பல்வேறு நடவடிக்கைகளை தமிழக அரசு எடுத்து வருகிறது.

அதில் ஒரு பகுதியாக கழுகு பாதுகாப்பு பணிகளை மேற்கொள்ள முதன்மை தலைமை வனப்பாதுகாவலர் மற்றும் தலைமை வன உயிரின காப்பாளர் தலைமையில் 10 பேர் கொண்ட மாநில அளவிலான பாறு கழுகு பாதுகாப்பு குழுஅமைக்கப்பட்டு உள்ளது.

கணக்கெடுப்பு

தமிழ்நாடு, கர்நாடகா மற்றும் கேரளாவில் ஒவ்வொரு ஆண்டும் பாறு கழுகுகள் குறித்த கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது. ஆனால் வெவ்வேறு காலங்களில் நடத்தப்படுவதால், அதன் எண்ணிக்கையை சரியாக கணக்கிட முடியவில்லை. இதனால் கழுகுகள் குறித்து தோராயமான மதிப்பீடுகள் மட்டுமே உள்ளன.

இந்த நிலையில் தமிழகம் உள்பட 3 மாநிலங்களிலும் முதன்முறையாக ஒருங்கிணைந்த முறையில் பாறு கழுகுகள் குறித்த கணக்கெடுப்பு சமீபத்தில் நடைபெற்றது. இதில் 3 மாநிலங்களிலும் சேர்ந்து மொத்தம் 246 பாறு கழுகுகள் இருப்பது தெரிய வந்தது.

வலி நிவாரண மருந்துகள்

பாறு கழுகுகள் செழித்தால் பாரும் செழிக்கும் என்று கூறுவது உண்டு. கால்நடைகளுக்கு பயன்படுத்தும் வலி நிவாரண மருந்துகளின் வீரியமானது, அவை இறந்த பிறகு உடலில் குறையாமல் இருக்கிறது. அந்த உடல் பாகங்களை தின்னும்போது பாறு கழுகுகள் அழிவிற்கு பெரிதும் காரணமாகிவிடுகிறது.

குறிப்பாக கால்நடை மருந்துகளான டைக்குளோபினாக், அசிக்குளோபினாக், நிமுசிலாய்ட்ஸ், புளூநிக்சின், கீட்டோபுரோபேன் ஆகிய மருந்துகள் பாறு கழுகுகளுக்கு தீங்கு விளைவிக்கக்கூடியதாக இருக்கிறது. இதை தவிர்த்து பாதுகாப்பான மாற்று மருந்துகளான மெலாக்சிகம், டோல்பினமிக் ஆசிட் மற்றும் சித்தா, ஆயுர்வேத மருந்துகளை கால்நடைகளுக்கு பயன்படுத்துவதோடு பாறு கழுகுகளை பாதுகாக்க முன்வர வேண்டும் என்று சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

பாதுகாப்பு மண்டலம்

இதுகுறித்து சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கூறியதாவது:-

இயற்கையாக இறந்த விலங்குகளை புதைக்காமலும், எரிக்காமலும் பாறு கழுகுகளுக்கு உணவாக்க வேண்டும். அவற்றை பாதுகாக்க இனப்பெருக்க மையங்களை அமைக்க வேண்டும்.

நீலகிரி உயிர்க்கோள சூழல் மண்டலத்தில் பாறு கழுகுகள் பாதுகாப்பு மண்டலம் ஏற்படுத்த வேண்டும். அதற்காக பாறு கழுகுகள் பயணம் செய்து திரும்பும் 100 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் 800 இறந்த கால்நடைகளின் உடலில் இருந்து மாதிரிகளை சேகரித்து அதில் டைக்லோபெனிக் உள்ளிட்ட மருந்துகள் கலக்கப்பட்டுள்ளதா? என்று கண்டறிய வேண்டும்.

நீர்மத்தி மரங்கள்

பாறு கழுகுகள் கணக்கெடுப்பானது குறிப்பிட்ட இடங்களை தேர்வு செய்து நடத்தப்படுகிறது. இதை தவிர்த்து அரியானா மாநிலம் பிஞ்சூரில் நடத்தப்படுவது போன்று 20 முதல் 30 கிலோமீட்டர் வேகத்தில் சாலை மார்க்கமாக பயணித்தவாறு பாறு கழுகுகள் கணக்கெடுப்பை நடத்த வேண்டும்.

அதாவது சிறியூரில் இருந்து வாழைத்தோட்டம், அதன்பின்னர் அங்கிருந்து மசினகுடி, மாயார், கக்கனல்லா சோதனை சாவடி மற்றும் கூடலூர் வரை பயணம் செய்தவாறு கணக்கெடுப்பு நடத்த வேண்டும்.

இவ்வாறு செய்யும்போது நீலகிரியில் வாழும் பாறு கழுகுகள் மற்றும் இமாலயன், யுரேசிய நாடுகளில் இருந்து வரும் கழுகுகளையும் அடையாளம் காண முடியும். மேலும் பாறு கழுகுகள் கூடி கட்டி வாழும் நீர் மத்தி மரங்களை பாதுகாக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Tags:    

மேலும் செய்திகள்