நாசரேத்தில் வீடுகளில் தொடர் திருட்டில் ஈடுபட்ட அண்ணன்- தம்பி உள்பட 3 பேர் கைது
நாசரேத்தில் வீடுகளில் தொடர் திருட்டில் ஈடுபட்ட அண்ணன்- தம்பி உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
நாசரேத்:
நாசரேத்தில் தொடர் திருட்டில் ஈடுபட்ட அண்ணன்-தம்பி உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
திருட்டு
நாசரேத் கதீட்ரல் தெருவைச் சேர்ந்தவர் அகஸ்டின் ஸ்பர்ஜன். ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியரான இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளிநாட்டில் உள்ள மகளின் வீட்டுக்கு சென்றார். இதனை நோட்டமிட்ட மர்மநபர்கள், அகஸ்டின் ஸ்பர்ஜனின் வீட்டின் கதவை உடைத்து திறந்து, வீட்டில் இருந்த நகைகள், டி.வி., மோட்டார் சைக்கிள், சி.சி.டி.வி. கேமரா ஹார்டு டிஸ்க் போன்றவற்றை திருடிச் சென்றனர்.
இதேபோன்று நாசரேத் குயின் தெருவைச் சேர்ந்த டேவிட்சன் ஓசன்னா மனைவி சுமதி பிரபா என்பவரது வீட்டிலும் சம்பவத்தன்று இரவில் மர்மநபர்கள் கதவை உடைத்து நகைகள், பணம், எலக்ட்ரானிக்ஸ் பொருட்களை திருடிச் சென்றனர்.
இதுகுறித்த புகார்களின்பேரில், நாசரேத் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
3 பேர் கைது
விசாரணையில், நெல்லை அருகே சுத்தமல்லியைச் சேர்ந்த சிவகுமார் மகன் அய்யப்பன் (23), ரங்கபாலன் மகன்கள் அன்புராஜ் (22), ரமேஷ் (வயது 19) ஆகிய 3 பேரும் சேர்ந்து நாசரேத்தில் 2 வீடுகளில் திருடியதும், மேலும் இவர்கள் நெல்லை, தென்காசி மாவட்டங்களிலும் தொடர் கைவரிசை காட்டியதும் தெரிய வந்தது.
இதையடுத்து அவர்கள் 3 பேரையும் போலீசார் கைது செய்து, அவர்களிடம் இருந்த மோட்டார் சைக்கிள், எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள், டி.வி. போன்றவற்றை மீட்டனர். மேலும் அவர்களிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
---