நம்பியூரில் மேற்கு மண்டல அளவிலான கைப்பந்து போட்டி தொடக்கம்

மேற்கு மண்டல அளவிலான கைப்பந்து

Update: 2022-07-02 16:55 GMT

நம்பியூரில் மேற்கு மண்டல அளவிலான கைப்பந்து போட்டி தொடங்கியது.

கைப்பந்து போட்டி

நம்பியூர் குமுதா பள்ளிக்கூட மைதானத்தில் மேற்கு மண்டல அளவிலான 2 நாட்கள் கைப்பந்து போட்டி நேற்று தொடங்கியது. விழாவுக்கு குமுதா பள்ளிக்கூட தாளாளரும், கமிட்டி சேர்மனுமான கே.ஏ.ஜனகரத்தினம் தலைமை தாங்கினார். குமுதா பள்ளிக்கூட செயலாளர் டாக்டர் அரவிந்தன், துணை செயலாளர் டாக்டர் மாலினி, இணை தாளாளர் சுகந்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

தமிழ்நாடு மாநில கைப்பந்து கழக பொதுச் செயலாளர் மார்ட்டின் சுதாகர் கலந்து கொண்டு பேசினார்.

அதைத்தொடர்ந்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

தமிழகத்தில் 4 மண்டலங்களில் மண்டல அளவிலான கைப்பந்து போட்டி நடக்கிறது. இதில் ஒவ்வொரு மண்டலத்திலும் 8 மாவட்ட அணிகள் பங்குகொண்டு லீக் மற்றும் நாக்அவுட் முறையில் விளையாடுகின்றன.

ஈரோடு மாவட்டத்தில்...

கைப்பந்து போட்டியில் வெற்றி பெறும் முதல் 4 அணிகள் தேர்வு செய்யப்பட்டு அடுத்த மாதம் சென்னையில் நடைபெறும் மாநில அளவிலான கைப்பந்து சாம்பியன்ஷிப் போட்டியில் விளையாடும்.

இதற்காக அரியலூர், நாகர்கோவில், வேலூர், ஈரோடு மண்டல அளவிலான போட்டிகள் இன்று (நேற்று) நடைபெற்று வருகிறது. ஈரோடு மாவட்டத்தில் நடைபெறும் போட்டியில் கோவை, திருப்பூர், ஈரோடு, நாமக்கல், நீலகிரி, தர்மபுரி, சேலம் உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த அணிகள் பங்கேற்று விளையாடுகின்றன.

தமிழக அணிக்கு தேர்வு

மாநில அளவில் நடைபெறும் போட்டியில் சிறப்பாக விளையாடும் வீரர்கள் தமிழக அணிக்கு தேர்வு செய்யப்படுவார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

நிகழ்ச்சியில் இயக்குனர்கள், குமுதா பள்ளிக்கூட முதல்வர் மஞ்சுளா, தலைமை ஆசிரியை வசந்தி மற்றும் தமிழ்நாடு கைப்பந்து கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்