முத்தையாபுரத்தில்உணவகம் மீது பெட்ரோல் குண்டு வீச்சு
முத்தையாபுரத்தில் உணவகம் மீது பெட்ரோல் குண்டு வீசிய வழக்கில் ஒருவர் கைது செய்யப்பட்டார்.
ஸ்பிக் நகர்:
தூத்துக்குடி முத்தையாபுரம் நாடார் தெருவை சேர்ந்தவர் தனவீரபாண்டி. இவருடைய மகன் சரவணபிரபு (வயது 29). இவர் முத்தையாபுரத்தில் உணவகம் நடத்தி வருகிறார். இவரது குடும்பத்தினருக்கும், அவரது பக்கத்து கடைக்காரர் ஷேக் முகமதுவுக்கும் (39) இடையே இடப்பிரச்சினை இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் சம்பவத்தன்று ஷேக் முகமதுவின் கடையில் வேலை செய்து வரும் மாரி கணேஷ் என்பவர் பெட்ரோல் நிரப்பிய பாலித்தீன் பையை சரவணபிரபுவின் கடையில் இருந்த விறகில் வீசி எறிந்து தீ வைத்ததாக கூறப்படுகிறது. மேலும் பெட்ரோல் நிரப்பிய பாலித்தீன் பையை கடையின் மீது வீசியதாகவும் தெரிகிறது. இதுகுறித்த புகாரின் பேரில், முத்தையாபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி ஷேக் முகமதுவை கைது செய்தனர். மேலும் மாரிகணேசை தேடி வருகின்றனர்.