தூத்துக்குடி முத்தையாபுரத்தில்பொதுமக்களிடம் அமைச்சர் குறைகேட்பு

தூத்துக்குடி முத்தையாபுரத்தில் பொதுமக்களிடம் அமைச்சர் கீதாஜீவன் குறைகேட்டார்.

Update: 2023-09-20 18:45 GMT

ஸ்பிக்நகர்:

தூத்துக்குடி முத்தையாபுரத்தில் பொதுமக்களிடம் நேற்று அமைச்சர் கீதாஜீவன் குறைகேட்டார்.

குறைகேட்பு நிகழ்ச்சி

தூத்துக்குடி மாநகராட்சி 53-வது வார்டுக்கு உட்பட்ட முத்தையாபுரம் தோப்பு தெருவில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நேற்று அமைச்சர் கீதாஜீவன் பொதுமக்களிடம் குறைகள் கேட்டார். அப்போது பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பொதுமக்கள் அமைச்சரிடம் மனுக்கள் கொடுத்தனர். அந்த மனுக்களை பெற்றுக்கொண்டு அமைச்சர் பேசுகையில், மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் அனைத்தையும் முழுமையாக நிறைவேற்றி தருவேன். இந்த பகுதிக்கு குடிநீர் சீராக வழங்கப்பட்டு வருகிறது. எந்த குறைபாடுகள் இருந்தாலும், உடனடியாக என்னிடம் தெரிவிக்கலாம். அந்த குறைகளை முழுமையாக நிவிர்த்தி செய்து தருவேன்' என்றார்.

இந்த நிகழ்ச்சியில் மாநகராட்சி செயற்பொறியாளர் பாஸ்கர், பொறியாளர் சரவணன், இலக்கிய அணி அமைப்பாளர் ஜீவன் ஜேக்கப் உள்பட பொதுமக்கள் கலந்து கொண்டனர். அதனை தொடர்ந்து அமைச்சர் 54-வது வார்டு பகுதிக்கு சென்று, அங்குள்ள மக்களிடமும் குறைகளை கேட்டறிந்தார். இந்நிகழ்ச்சியில் வார்டு கவுன்சிலர் விஜயகுமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

மருத்துவ உபகரணம்

மேலும், கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு வடக்கு மாவட்ட தி.மு.க. மருத்துவர் அணி சார்பில் தூத்துக்குடி கணேஷ்நகர், விளாத்திகுளம் புதூர், கோவில்பட்டி ஆகிய ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு மருத்துவ உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி தூத்துக்குடி கணேஷ்நகரில் உள்ள நகர்ப்புற ஆரம்ப சுகாதார மையத்தில் நேற்று நடந்தது. இந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும், சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சருமான கீதாஜீவன் தலைமை தாங்கி, எடை எந்திரம், ரத்தம், சுகர், ரத்த அழுத்த பரிசோதனைக்கான கருவிகள், அறுவை சிகிச்சைக்கான கருவிகள் உள்ளிட்ட மருத்துவ உபகரணங்களை ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலர் ஆர்த்தியிடம் அமைச்சர் வழங்கினார். தொடர்ந்து அந்த சுகாதார நிலையத்தை பார்வையிட்டு அவர் ஆய்வு செய்தார்.

நிகழ்ச்சியில் மாநகர தி.மு.க செயலாளர் ஆனந்த சேகரன், துணை மேயர் ஜெனிட்டா, சுகாதார துறை இணை இயக்குநர் பொற்செல்வன், பகுதி செயலாளர் ராமகிருஷ்ணன், பெருமாள் கோவில் அறங்காவலர் குழு தலைவர் செந்தில்குமார், மாநகராட்சி நகர்நல அலுவலர் சுமதி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

குரூஸ்பர்னாந்து மணிமண்டபம்

இதனை தொடர்ந்து அமைச்சர் கீதாஜீவன் தூத்துக்குடியில் அமைக்கப்பட்டு வரும் குரூஸ்பர்னாந்து மணிமண்டபத்தை நேரில் ஆய்வு செய்தார். விரைவில் இந்த மணி மண்டபத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொளி காட்சி மூலம் திறந்து வைக்க இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் தூத்துக்குடி பழைய பஸ்நிலைய பணிகளையும் அமைச்சர் கீதாஜீவன் ஆய்வு செய்தார்.

Tags:    

மேலும் செய்திகள்